திருப்பூர்: ''தி.மு.க., - எம்.பி., ராஜாவை லோக்சபா தேர்தலில் டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர்., குறித்து தவறாக விமர்சித்தால், இது தான் தண்டனை என்பதை அவர் உணர வேண்டும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.எம்.ஜி.ஆர்., குறித்து விமர்சித்த நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜாவை கண்டித்து, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நேற்று அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து பேசியதாவது:எம்.ஜி.ஆர்., என்ற மாமனிதரை, ராஜா தரக்குறைவாக பேசியதை மக்கள் ஏற்கமாட்டர். சில தலைவர்கள் தன் மக்களுக்காக வாழ்ந்தனர்; அப்படிப்பட்டவர்களில் எம்.ஜி.ஆர்., முதன்மையானவர். 'வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும்' என்பது போல, மக்கள் வெகுண்டெழுந்தால், ராஜாவால் தாக்குப்பிடிக்க முடியாது.கருணாநிதி குடும்பம் கடனில் தத்தளித்தது. 'எங்கள் தங்கம்' என்ற திரைப்படத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சம்பளம் பெறாமல் நடித்துக் கொடுத்து, கருணாநிதி குடும்பக் கடனை அடைத்தனர்.கடந்த 1967 தேர்தலில், எம்.ஜி.ஆர்., முகம் காட்டியதால் மட்டுமே தி.மு.க., ஆட்சிக்கு வர முடிந்தது. கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்தவர் தான் இந்த ராஜா. வரும் லோக்சபா தேர்தலில், ராஜாவை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர்., குறித்து தவறாக விமர்சனம் செய்தால், இது தான் தண்டனை என்பதை ராஜா உணர வேண்டும்.அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும் என ஜெ., அறிவித்தார். அவர் மறைந்தாலும், 1,652 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநில நிதியை மட்டும் ஒதுக்கி, 90 சதவீதம் திட்டப் பணிகளை நிறைவேற்றினோம்.தி.மு.க., 2021ல் ஆட்சிக்கு வந்தபோது, 10 சதவீத பணிகள் மட்டும் பாக்கியிருந்தன. ஆனால், திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்டது என்பதால், திட்டத்தையே முடக்கி உள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள், வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; குற்றச்செயல் அதிகரித்து விட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.தேர்தலின்போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு; வந்த பின் ஒரு பேச்சு என்பதே தி.மு.க.,வின் வேலையாகி விட்டது. மக்களும் இதை புரிந்து கொண்டு விட்டனர்.இவ்வாறு பழனிசாமி பேசினார்.