உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் வேட்பாளராக தன்னையே பிரகடனப்படுத்த பழனிசாமி திட்டம்

முதல்வர் வேட்பாளராக தன்னையே பிரகடனப்படுத்த பழனிசாமி திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முதல்வர் வேட்பாளர் என, தன்னை உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறாத நிலையில், தன் சுற்றுப்பயணத்தின்போது, தன்னை முதல்வர் வேட்பாளராக பிரகடனப்படுத்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை, அமித் ஷா அறிவித்தபோது, 'தமிழகத்தில் பழனிசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்' என்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=15bcef6v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என, அமித் ஷா கூறியதாக தகவல் வெளியானது; அதை பழனிசாமி மறுத்தார். 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, ஆட்சி அமைக்கும் என அமித் ஷா தெரிவித்தாரே தவிர, கூட்டணி அரசு எனக் கூறவில்லை' என, விளக்கம் அளித்தார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும், கூட்டணி ஆட்சிக்கு தமிழகத்தில் வாய்ப்பில்லை என்றனர்.இப்பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், சமீபத்தில் அமித் ஷா அளித்த பேட்டியில், 'தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பா.ஜ., அங்கம் வகிக்கும். அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்; அக்கட்சியில் இருந்து ஒருவர் முதல்வர் ஆவார்' என கூறியிருந்தார்.'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை' என, அ.தி.மு.க., கூறிவந்த நிலையில், ஆட்சியில் பா.ஜ., அங்கம் வகிக்கும் என அமித் ஷா கூறியதும், அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளராக பழனிசாமி பெயரை, அமித் ஷா கூறாததும், பழனிசாமிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என, அமித் ஷா ஏன் அறிவிக்கவில்லை என்று அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எனினும், இதுகுறித்து வெளியில் யாரும் பேச வேண்டாம் என, பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், வரும் 7ல் கொங்கு மண்டலத்திலிருந்து, தேர்தல் சுற்றுப்பயணத்தை பழனிசாமி துவக்க உள்ளார். அப்போது, முதல்வர் வேட்பாளராக, தன்னை பிரகடனப்படுத்தும் வகையில், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற திட்டத்தை வகுத்துள்ளார்.இதுகுறித்து அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:சமீபத்தில், கோவையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்தை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். அவர்களின் சந்திப்பு, தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், அமித் ஷா அளித்த பேட்டியில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றால், பழனிசாமி முதல்வர் ஆவார் என, அவருடைய பெயரை குறிப்பிடவில்லை. இது, பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின், பழனிசாமிக்கு பதிலாக வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோரில் யாராவது ஒருவரை முதல்வராக்க, பா.ஜ., தரப்பு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பா.ஜ.,விடம் இப்படிப்பட்ட முயற்சிகள் எதுவும் இருந்தால், அதை உடனே களைந்துவிட வேண்டும் என பழனிசாமி விரும்புகிறார்.அதனால், கட்சி சின்னம் குறித்த பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காண, பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பான விசாரணையை, நீதிமன்றம் ஜூலை 4க்கு ஒத்தி வைத்துள்ளது. அதேபோல, தன் சுற்றுப்பயணத்தின்போது, தன்னை முதல்வர் வேட்பாளராக பிரகடனப்படுத்தி, அதை மக்கள் மத்தியில் பதிய வைத்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் பழனிசாமி உள்ளார்.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினரும், முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை முன்னிறுத்தி, பல நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !