அ.தி.மு.க., ஆட்சி மீது பழி போடாதீர் அமைச்சருக்கு பன்னீர்செல்வம் பதிலடி
சென்னை:'அ.தி.மு.க., ஆட்சி மீது பழி போடாமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை, தி.மு.க., அரசு விரைந்து எடுக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம், மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இது கண்டனத்துக்கு உரியது. சமீபத்தில் அரசு ஊழியர்கள் குறித்து, நிதி அமைச்சர் நீண்ட அறிக்கை வெளியிட்டார். அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, ஒரு வார்த்தையும் சொல்லாமல், அ.தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. தி.மு.க.,தான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது எனக் கூறியுள்ளார்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட துரோகங்களையும், அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையும், அறிந்து கொள்ளாமல், அமைச்சர் அறிக்கை விடுவது நகைப்புக்குரியதாக உள்ளது.அமைச்சர் அறிக்கைக்கு பிறகு, தலைமைச் செயலக சங்கம், முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் உள்ளக் குமுறலை, அந்தக் கடிதம் படம் பிடித்து காட்டியுள்ளது.எனவே, அ.தி.மு.க., ஆட்சி மீது பழி போடாமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை, தி.மு.க., அரசு விரைந்து எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.