உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு ரயில்கள் தாமதம்; பயணியர் கடும் எரிச்சல்

சிறப்பு ரயில்கள் தாமதம்; பயணியர் கடும் எரிச்சல்

சென்னை: பண்டிகை நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், நான்கு மணி நேரம் வரை, தாமதமாக இயக்கப்படுகின்றன; இதனால், அவற்றில் பயணிக்கும் பயணியர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட வழித்தடங்களில், 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களை விட, இந்த சிறப்பு ரயில்களில், 'சிலீப்பர்' பெட்டிகளில், 100 முதல் 200 ரூபாய் வரை, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லாமல், மிகவும் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில் இருப்பது போல், வசதிகள் இருப்பதில்லை. மேலும், ஆங்காங்கே நிறுத்தி இயக்கப்படுகின்றன. இதனால், குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை. நான்கு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகிறது. மேலும், ரயில்கள் தாமதம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடுவதில்லை. வழக்கமான ரயில்களை விட, சிறப்பு ரயில்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவது, பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து ரயில்களையும் சரியான நேரத்தில் இயக்க, கவனம் செலுத்தி வருகிறோம். வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களுக்கு, வழி விடுவதால், சிறப்பு ரயில்கள் செல்வதில், சிறிது நேரம் தாமதம் ஏற்படுகிறது. பல்வேறு இடங்களில் நடக்கும் இரட்டை ரயில்பாதை பணிகள் முடியும்போது, ரயில்களின் தாமதம் குறையும். மேலும், கூடுதலாக ரயில்களை இயக்க முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arul Narayanan
ஜன 21, 2025 14:22

கடந்த அக்டோபர் பதினொன்றாம் தேதி அன்று ஹைதராபாத்தில் இருந்து நாகர்கோவில் சென்ற சிறப்பு ரயில் மதுரைக்கு பத்து மணி நேரம் தாமதமாக வந்தது. காட்பாடி விழுப்புரம் இடையே பயணிகள் ரயில்கள் கடப்பதற்காக கூட வெகு நேரம் நிறுத்தி வைக்க பட்டது.


முக்கிய வீடியோ