மேலும் செய்திகள்
தன்பாத் சிறப்பு ரயில் இன்று தாமதமாகும்!
01-Apr-2025
விருதுநகர் : தாம்பரம் - செங்கோட்டை 'சிலம்பு' ரயிலில் மூன்றடுக்கு ஏசி படுக்கை வசதிப்பெட்டிக்கு பதில் 2ம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி இணைக்கப்பட்டதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் தாமதமாக ரயில் விருதுநகர் வந்தது.தாம்பரம் -- செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்களுக்கு சிலம்பு ரயில் எண் 20681 இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக காலை 8:25 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தாம்பரத்திற்கு இந்த ரயிலின் பெட்டிகள் வந்தன. அதில் ஒரு மூன்றடுக்கு ஏசி படுக்கை பெட்டியில் (பிஇ1) ஏசியில் ஏற்பட்ட பழுது காரணமாக 2ம் வகுப்பு படுக்கை வசதிப்பெட்டி இணைக்கப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் மாற்றுப்பெட்டிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அந்த பெட்டியிலும் விளக்கு, மின்விசிறி உள்ளிட்டவை வேலை செய்யாததால் டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரவு 9:00 மணிக்கு ரயில் புறப்பட முற்பட்டதையடுத்து அபாயச்சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எப்.,) போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெட்டி மாற்றம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை எனவும், ஏசி பெட்டி பழுது எனில் மற்றொரு ஏசி பெட்டி இணைப்பதற்கு பதில் சாதாரண பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் பயணிகள் குற்றம் சாட்டினர்.பின் 2ம் வகுப்பு படுக்கை வசதிப்பெட்டிக்கான கட்டணம் தவிர்த்து மீதத்தொகை திரும்ப வழங்கப்படும் என ரயில்வே தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்து ஒன்றரை மணி நேரம் தாமதமாக நேற்று முன் தினம் இரவு 10:30 மணிக்கு ரயில் புறப்பட்டது.இதனால் விருதுநகருக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக நேற்று காலை 7:18 மணிக்கு வந்தது. செங்கோட்டைக்கு ஒரு மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக காலை 9:45 மணிக்கு சென்றது.
01-Apr-2025