சென்னை திரும்பிய முதல்வர் சென்ட்ரலில் பயணியர் தவிப்பு
சென்னை:திருப்பத்துாரில் இருந்து ரயிலில், சென்னை வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்க வந்தவர்களால், சென்ட்ரலில் பயணியர் பாதிப்புக்கு உள்ளாகினர்.வேலுார் மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில், அரசு நிகழ்ச்சிகள், கட்சி ஆலோசனை கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் சென்ட்ரலில் இருந்து, காட்பாடிக்கு விரைவு ரயிலில் புறப்பட்டு சென்றார். சென்னை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதல்வரை வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, திருப்பத்துாரில் இருந்து, நேற்று மாலை 4:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் ரயிலில் சென்னை திரும்பினார். அவரை வரவேற்க, ஏராளமான தி.மு.க., தொண்டர்கள், கையில் கருப்பு, சிவப்பு வண்ண பலுான்களுடன், பகல் 2:30 மணி முதல் காத்திருந்தனர். முதல்வர் வருகை காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலைய பார்க்கிங் பகுதிக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவசரமாக ரயில்களை பிடிக்க சென்ற, பல பயணியர் அவதிக்குள்ளாகினர். முதல்வர் வருகைக்கு முன், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 15 நிமிடங்களுக்கு மேல் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், அவசர வேலை காரணமாக சென்றவர்கள் அவதிப்பட்டனர்.