உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திட்ட பதிவு எண் இல்லையேல் அபராதம்; கட்டுமான நிறுவனங்களுக்கு ரெரா கண்டிப்பு

திட்ட பதிவு எண் இல்லையேல் அபராதம்; கட்டுமான நிறுவனங்களுக்கு ரெரா கண்டிப்பு

சென்னை: 'குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தம் கட்டுமான நிறுவனங்கள், அதுகுறித்த அறிவிப்பு பலகைகள் மற்றும் கையேடுகளில், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பெறும் பதிவு எண்ணை, பெரிய எழுத்துகளில் குறிப்பிடுவது கட்டாயம்' என, 'ரெரா' எனப்படும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், வீடு, மனை விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, 2017 ல் ரியல் எஸ்டேட் ஆணையம், தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. இதன்படி, 5,381 சதுரடி நிலத்தில் செயல்படுத்தப்படும் குடியிருப்பு திட்டங் களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம். அவ்வாறு பதிவு செய்யாத திட்டங்களில், வீடு, மனை விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் திட்டங்களை ரியல் எஸ்டேட் ஆணையத்தில், பதிவு செய்ய முன்வந்து உள்ளன. எனினும், இதுகுறித்த விபரங்களை, கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்லை. அதனால், பொதுமக்களுக்கு வீடு, மனை வாங்கும் போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக ரியல் தமிழக எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், அத்திட்டங்களை ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்த விபரங்களை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். குடியிருப்பு திட்டங்கள் தொடர்பான விளம்பரங்கள், அறிவிப்பு பலகை, துண்டு பிரசுரங்கள், கையேடு, சிற்றேடுகள் ஆகியவற்றில், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு எண் விபரத்தை, பெரிய எழுத்துகளில் குறிப்பிட வேண்டும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின், 61வது பிரிவின்படி இது கட்டாயமாகும். ஊடகங்களில் தங்கள் திட்டங்களை தெரிவிக்கும் போதும், பதிவு விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதில், படிக்க இயலாத அளவில், சிறிய எழுத்துகளாக குறிப்பிடுவதும் தவறாகும். இதுபோன்ற தவறுகளை செய்யும் கட்டுமான நிறுவனங்களுக்கு, சம்பந்தப்பட்ட திட்டத்தின் மதிப்பில், 5 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை