கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசு விசாரணைக்கு மக்கள் பாராட்டு: ரகுபதி
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்த 68 பேர் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். வழக்கில் முழுமையான விசாரணையை கிட்டத்தட்ட முடித்து விட்டது சி.பி.சி.ஐ.டி., ஆனாலும், சி.பி.ஐ., விசாரணை என்றதும் அதிர்ச்சியாக உள்ளது. கள்ளச்சாராய மரணம் தொடர்பான நிகழ்வில், எந்த மாநிலங்களும் எடுக்காத அளவுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சி.பி.ஐ., என்பதும் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் போலீஸ் விசாரணை அமைப்புத்தான். மத்திய அரசின் கீழ் செயல்படக்கூடிய அமைப்பு சி.பி.ஐ., இது போன்ற தீர்ப்புகள், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே நடக்கும் நிர்வாகத்தை சீர்குலைவாக்கும். தமிழக போலீசார், ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு இணையான அளவில் விசாரணை மேற்கொள்ளும் அளவுக்கு தகுதி படைத்தவர்கள்.கள்ளக்குறிச்சி வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். என்ன தான் சி.பி.ஐ., விசாரணை என்றாலும், இனி துவக்கத்தில் இருந்து தான் விசாரணை துவங்கப்பட வேண்டும். இது கால விரயத்தைத்தான் ஏற்படுத்தும். கள்ளச்சார மரணத்துக்குப் பின், போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விலக்கிக் கொண்டது தவறு என நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. ஒரு அதிகாரியையோ, போலீசையோ காலம் காலத்துக்கு தண்டித்துக் கொண்டே இருக்க முடியாது. ஆறு மாத காலத்துக்குப் பின், ஆந்த நடவடிக்கையை திரும்பப் பெற்றாக வேண்டும்.அதை விட்டு விட்டு, அவர்களை தண்டனையிலேயே வைத்திருக்க வேண்டும் என்றால், வேலையை விட்டுத்தான் நீக்க வேண்டும். அப்படி செய்து, தண்டனை பெற்றவர்கள் நீதிமன்றம் சென்றால், வேலை நீக்கம் செல்லாது என நீதிமன்றம் சொல்லக்கூடும். அதனால், எதையும் நிதானமாகத்தான் செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி மக்களே, சாராய மரணத்துக்குப் பின், தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கைகள் சரி என பாராட்டியுள்ளனர். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு சில கட்சிகள், இதை தொடர்ந்து அரசியல் ஆக்குகின்றன. இவ்வாறு அவர் கூறினார். -நமது நிருபர்-