திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் நேரம் மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கும்பாபிஷேகத்தை வரும் 7ம் தேதி காலை 6:00 மணியில் இருந்து 6:47 மணி வரை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, சிவராம சுப்பிரமணிய சாஸ்திரிகள் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணை, நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கும்பாபிஷேக நேரத்தை வித்யாகர் தான் குறித்து கொடுக்க வேண்டும். உயர் நீதிமன்றம் அமைத்த குழு இந்த நேரத்தை முடிவு செய்துள்ளது. இது சாஸ்திரப்படி தவறு. 'எனவே இதை ரத்து செய்துவிட்டு வரும் 7ம் தேதி கோவில் வித்யாகர் பரிந்துரைக்கும், 12:05 மணி முதல் 12:45 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை வைத்தார். இதை கேட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் தற்போது தலையிட்டால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும். நாங்கள் ஒன்றும் நிபுணர்கள் கிடையாது. 'கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடக்கவுள்ளது. தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் தலையிடுவது சரியானதாக இருக்காது' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -