வாழப்பாடி : வாழப்பாடி அடுத்த, பெலாப்பாடி மலை கிராமத்தில், நண்பர்களுடன் முயல் வேட்டைக்கு சென்றவர் பலியானார்; காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த, அருநூற்றுமலை தொடரில், சாலை, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் இல்லாத மலை உச்சியில், பெலாப்பாடி மலை கிராமம் அமைந்துள்ளது. அந்த மலை கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ், 34. அவருக்கு ராணி, 29, என்ற மனைவியும், ரம்யா, 11, என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை, அவரது அண்ணன் ராஜாமணி, 45, மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் ஆறு பேர், முயல் வேட்டைக்காக வனப்பகுதிக்கு சென்றனர். காலை 8 மணியளவில், பெலாப்பாடி மலையடிவாரம் கோலாத்துகோம்பை புதூர் வனப்பகுதியில், பதுங்கிய முயலை பிடிக்க முயற்சித்தனர். சிக்காமல் தப்பியோடிய முயலை பிடிக்க, அவரது நண்பர் கந்தசாமி, 25, துப்பாக்கியால் சுட்டார். அது குறி தவறி, காமராஜ் மீது குண்டு பாய்ந்தது. நிலை குலைந்த காமராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். காமராஜ் உடலை கைப்பற்றிய காரிப்பட்டி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.