சென்னை:மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான அழைப்பிதழை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலர் சரவணன் வழங்கினார்.கடந்த 2013ம் ஆண்டுக்கு பின், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், வரும் மே 11ம் தேதி, மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு நாள் மாநாடு நடக்கவுள்ளது. இதற்கான அழைப்பிதழை, பா.ம.க.,வினர் அனைத்து சமுதாயத் தலைவர்களிடமும் வழங்கி வருகின்றனர். மாநாட்டு குழு தலைவரான அன்புமணி, மாநாட்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அரக்கோணத்தில் திருமாவளவனை சந்தித்த, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலர் சரவணன், அவருக்கு பொன்னாடை அணிவித்தார். பின், தாம்பூலத் தட்டில் வாழைப் பழம், ஆப்பிள், சாத்துக்குடி பழங்கள், வெற்றிலைப் பாக்கு வைத்து, மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி, அழைப்பு விடுத்தார். ராமதாஸ், அன்புமணி அன்பிற்கிணங்க, இந்த அழைப்பிதழை வழங்குவதாகவும் கூறினார்.சிரித்துக் கொண்டே அழைப்பிதழை பெற்றுக் கொண்ட திருமாவளவன், மாநாடு சிறப்பாக நடக்க தன் வாழ்த்துகளை, பா.ம.க., நிறுவனர் ராமதாசிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, பா.ம.க., சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் மைதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.திருமாவை சமாதானப்படுத்தும் முயற்சியா?கடந்த 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், வி.சி., - பா.ம.க., இணைந்து போட்டியிட்டன. அதன்பின், அரசியல் களத்தில் இரு கட்சிகளும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, சித்திரை முழு நிலவு மாநாடுகளின்போது, பா.ம.க., -- வி.சி., தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, பெரும் பிரச்னையானது. அப்போது ஏற்பட்ட வன்முறையால், இரு கட்சிகளைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டனர். இந்தப் பிரச்னைச் சென்னை உயர் நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக நடந்து வந்த மாநாட்டை, தொடர்ச்சியாக பா.ம.க.,வால் நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு, பா.ம.க., மாவட்டச் செயலர் ஒருவரே, திருமாவளவனுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்திருப்பது, அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.கடந்த 2009 லோக்சபா தேர்தலில் இருந்து, லோக்சபா, சட்டசபை என தொடர் தோல்விகளை, பா.ம.க., சந்தித்து வருகிறது. அதனால், வரும் 2026ல் வெற்றி பெறும் கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டும் என, ராமதாஸ் விரும்புகிறார். அவரது முதல் தேர்வு, தி.மு.க., கூட்டணியாக உள்ளது. அங்கு வி.சி., இருப்பதால், பா.ம.க.,வால், அங்கு போக முடியவில்லை. தி.மு.க., கூட்டணியில் இணைய முடிவெடுக்கும்பட்சத்தில், வி.சி.,யிடம் இருந்து எதிர்ப்புக் குரல் வரலாம் என பா.ம.க., தரப்பு கருதுகிறது. அப்படியொரு சூழல் உருவானால், அதற்கு வி.சி., எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். அதற்கான ஒரு சமாதான முயற்சியாகவே, பா.ம.க., மாவட்டச் செயலர் சரவணன், திருமாவளவனிடம் அழைப்பிதழ் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ராமதாஸின் முழு சம்மதம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு, 'நானே தலைவர்' என அறிவித்த சூட்டோடு, தன் அரசியல் ஆட்டத்தை ராமதாஸ் துவக்கி விட்டதாக சொல்கின்றனர் பா.ம.க.,வினர்.இருந்தபோதும், நேற்று வரை பா.ம.க.,வினர் என்றால், வேப்பங்காயை கடித்தது போன்று முகத்தை சுழித்த திருமாவளவனுக்கு, பா.ம.க., நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தது, பா.ம.க., தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.