சென்னை: ஹிந்துக்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்ற முயன்றதை கண்டித்ததால், கொலை செய்யப்பட்ட, பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் வழக்கில், ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நான்கு பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், 45; பா.ம.க., பிரமுகர். திருபுவனம் மற்றும் சுற்றுப்பகுதியில், ஹிந்துக்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்படுவதை கண்டித்தார். இதனால், கடந்த, 2019ல், மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளாக, 18 பேரை அடையாளம் கண்டனர். அவர்களில், 13க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இக்கொலை வழக்கில், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த வடக்கு மாங்குடி, பள்ளிவாசல் தெருவை சேர்ந்த புர்ஹானுதீன், 37; தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதுார், திருமங்கலகுடியை சேர்ந்த நபீல்ஹாசன், 37, உட்பட ஐந்து பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, அறிவித்து இருந்தனர். அவர்களில் ஏற்கனவே மூவர் கைதான நிலையில், புர்ஹானுதீன் மற்றும் நபீல்ஹாசன், கடந்த ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தனர். அதேபோல், இவ்வழக் கில் சம்பந்தப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அப்பாஸ், 30; முகமது இம்ரான், 33, ஆகியோரும் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்கள், கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சென்னைக்கு, நேற்று காரில் செல்வதாக மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களுடன், வேலுார் மாவட்ட போலீசார் இணைந்து, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காரை மடக்கி, நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.