சென்னை : ராமதாஸ், அன்புமணி ஆதரவு பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் அப்பாவுவை தனித்தனியாக சந்தித்து, கொறடா பதவி தொடர்பாக கடிதம் அளித்தனர். இதனால், சட்டசபையில் பா.ம.க., இரண்டாக உடைந்துள்ளது.பா.ம.க.,வில் அப்பா -- மகன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்குவது, புதியவர்களை நியமிப்பது என, போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க., பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் அன்பு மணி பக்கம் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை ராமதாஸ் நியமித்தார். புதிய கொறடா
பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரில் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் ராமதாஸ் பக்கம் உள்ளனர். சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோர் அன்புமணி பக்கம் உள்ளனர். தனக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருளை, கடந்த 2ம் தேதி கட்சியிலிருந்து அன்புமணி நீக்கினார்.இதை ஏற்காத ராமதாஸ், 'பா.ம.க.,விலிருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. இணை பொதுச்செயலர், நிர்வாகக் குழு உறுப்பினர், எம்.எல்.ஏ., ஆகிய பொறுப்புகளில் அருள் தொடர்வார்' என அறிவித்தார்.இந்நிலையில், பா.ம.க., செய்தித் தொடர்பாளர் பாலு தலைமையில் நேற்று காலை தலைமை செயலகம் வந்த அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோர், தமிழக சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். அப்போது, 'பா.ம.க., கொறடாவாக சிவகுமாரை நியமிக்க வேண்டும்' என்ற அன்புமணியின் கடிதத்தை அளித்தனர்.பின், பாலு அளித்த பேட்டி:
பா.ம.க., கொறடாவாக இருக்கும் அருள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, பா.ம.க., சட்டசபை கொறடாவாக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதை ஏற்று, அவரை பா.ம.க.,வின் புதிய கொறடாவாக சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்ற அன்புமணியின் கடிதத்தை, சபாநாயகரிடம் வழங்கினோம். சட்டசபை விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் உறுதி அளித்தார்.பா.ம.க., உடையவில்லை; அன்புமணி தலைமையில், அனைத்து நிர்வாகிகளுடன் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.பா.ம.க., தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவி, வரும் 24ல் முடிகிறது. அது தொடர்பான பணிகளுக்காகவே அவர் டில்லி சென்றுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க வேண்டிய தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.அதைத் தொடர்ந்து, தலைமை செயலகம் வந்த பா.ம.க., கொறடா அருள், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அருள், “பா.ம.க., சட்டசபை குழு தலைவராக ஜி.கே.மணி, கொறடாவாக சேலம் மேற்கு எம்.எல்.ஏ., அருள் தொடர்வார் என, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அளித்த கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினேன். பா.ம.க.,வுக்கு ராமதாஸ் தான் தலைவர். என்னை நீக்கும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது,” என்றார். சபாநாயகர் கையில்
பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரில், மூன்று பேர் அன்புமணி பக்கமும், இருவர் ராமதாஸ் பக்கமும் உள்ளனர். இரு தரப்பிலும் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளதால், யாருக்கு கொறடா பதவி என்பதை சபாநாயகர் முடிவு செய்வார்.
பொதுக்குழு கூடாது
சபாநாயகரை சந்தித்த பின் பேட்டியளித்த பாலு, “பா.ம.க., கட்சி விதி 13ல், மாநிலப் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் தலைமைக் குழு கூட்டங்களுக்கு, நிறுவனர் அழைக்கப்பட்டு அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.“இதைத் தவிர, நிறுவனர் பணிகள் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. எனவே, நிறுவனர் ராமதாஸ் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது; கூட்டவும் மாட்டோம். இப்போதைக்கு அதற்கான அவசியம் எழவில்லை,” என்றார்.