வன்னியர் ஒதுக்கீடு டிச.24ல் பா.ம.க., போராட்டம்
சென்னை:'வன்னியர் இட ஒதுக்கீடு கோரி, டிச. 24ம் தேதி, பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, 24ம் தேதியுடன் 1000 நாட்கள் ஆகின்றன. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதியின் அடிப்படை. இல்லாத காரணங்களை கூறி, ஓர் அரசு மறுக்கிறது என்றால், அந்த அரசை நடத்துபவர்கள், வன்னியர்கள் மீது எந்த அளவுக்கு வன்மம் கொண்டிருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.எனவே, டிச. 24 செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணிக்கு, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களிலும் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. காஞ்சிபுரத்தில் நடக்கும் போராட்டத்தில் அன்புமணி பங்கேற்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.