உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவில் காவலாளிகள் கொலையில் வாலிபரை சுட்டுப்பிடித்தது போலீஸ்

 கோவில் காவலாளிகள் கொலையில் வாலிபரை சுட்டுப்பிடித்தது போலீஸ்

ராஜபாளையம்: கோவில் காவலாளிகள் கொலை வழக்கில், போலீசாரை தாக்கி தப்ப முயன்ற வாலிபரை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோர் இரவு பணியின் போது, நேற்று முன்தினம் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதில், கொலையாளிகள் உண்டியல் பணத்தை திருடியது மட்டுமின்றி, கோவிலில் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் எடுத்து சென்றனர். நேற்று முன்தினம் இரவு, வடக்கு தேவதானத்தை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ், 25, என்ற வாலிபர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்க அவரை சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்ற போது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் எஸ்.ஐ., கோட்டியப்பசாமியை வெட்டி தப்ப முயன்றார். உடன் இருந்த சேத்துார் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், நாகராஜை காலில் சுட்டு பிடித்தார். நாகராஜ், எஸ்.ஐ., கோட்டியப்பசாமி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கொலை நடந்த பின், கோவிலின் முன் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இதில், மக்களோடு மக்களாக நின்று, நாகராஜ் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்; கொலையானவர்கள் உடலை பார்க்க அனுமதிக்க வேண்டும் என, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நவ., 7ல் நிபந்தனை ஜாமினில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி