உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞரை தாக்கிய போலீசாருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

இளைஞரை தாக்கிய போலீசாருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை:இளைஞர் மீது பொய் வழக்கு போட்டு, அடித்து துன்புறுத்திய, ஏர்வாடி சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி டோனாவூரை சேர்ந்தவர் ஜோசப் செல்வகுமார். இவர், கடந்த 2018ல், மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: சவூதி அரேபியாவில் பணியாற்றிய நான், திருமணத்திற்காக, 2018 ஜூலை மாதம் சொந்த ஊர் வந்தேன். வீட்டில் பெயின்டிங் வேலை நடந்தது. அப்போது, வேலைக்கு வந்த ஊழியர்களுக்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து, ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பெண், எனது பெயரையும் சேர்த்து விட்டார். காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்தபோது, நிச்சயதார்த்தம் நடப்பதை கூறி அவகாசம் கேட்டேன். உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றேன். திருமணம் முடிந்ததும், நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜரானேன். அதன்பிறகு ஏர்வாடி போலீஸ் நிலையம் சென்றேன். அப்போது பணியில் இருந்த, எஸ்.ஐ., இமானுவேல், காவலர் முத்துகுமார் ஆகியோர், விசாரணைக்கு வராமல், உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற எவ்வளவு தைரியம் எனக் கூறி, என்னை அடித்து உதைத்தனர். என் மீது மேலும் சில பொய் வழக்குகளை பதிவு செய்தனர். இப்படி மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை நேற்று விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு: ஆணையம் நடத்திய விசாரணையில், மனுதாரர் ஜோசப் செல்வகுமாரை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஏர்வாடி எஸ்.ஐ., மற்றும் காவலர் அடித்து துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசார் இருவரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட ஜோசப் செல்வகுமாருக் கு, தமிழக அரசு, நான்கு வாரங்களுக்குள் 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இத்தொகையை ஏர்வாடி எஸ்.ஐ., இமானுவேல், காவலர் முத்துகுமார் ஆகியோரிடம் இருந்து, தலா 50,000 ரூபாய் வசூலித்து கொள்ளலாம். இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி