உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  குடியிருப்புகளை வாடகைக்கு விடும் போலீசார்; மாநிலம் முழுதும் உயர் அதிகாரிகள் ஆய்வு

 குடியிருப்புகளை வாடகைக்கு விடும் போலீசார்; மாநிலம் முழுதும் உயர் அதிகாரிகள் ஆய்வு

சென்னை: காவலர் குடியிருப்புகளை குத்தகைக்கும், மேல் வாடகைக்கும் விடுவதாக போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், மாநிலம் முழுதும், குடியிருப்புகளில் ஆய்வு நடக்கிறது. தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் வாயிலாக, ஆயுதப்படை காவலர்கள், எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் குறைந்த வாடகைக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன. கணவன், மனைவி இருவருமே காவல் துறை பணியில் இருந்தால், அவர்களுக்கு வீடு ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 'உங்கள் சொந்த இல்லம்' திட்டத்திலும் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. இதுவரை 'உங்கள் சொந்த இல்லம்' திட்டத்தில், 4,991 வீடுகள், 54,445 காவலர் வாடகை குடியிருப்புகள் கட்டப்பட்டு, போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காவலர் குடியிருப்புகளில், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் சிபாரிசு வாயிலாக, சீனியாரிட்டி பட்டியலை, 'ஓவர் டேக்' செய்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் வீடு ஒதுக்கீடு பெற்று வருகின்றனர். 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்து வீடு கிடைக்காமல், பல ஆயிரம் போலீசார் காத்து கிடக்கும் நிலையில், காவலர் குடியிருப்புகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை, போலீசார் மற்றும் அதிகாரிகள் சிலர், வாடகைக்கும், குத்தகைக்கும் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மாநிலம் முழுதும் காவலர் குடியிருப்புகளில், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் வசிக்கின்றனரா என ஆய்வு நடக்கிறது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

காவலர் குடியிருப்புகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள, 'லைன் ஆர்டலி' என்ற நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், காவலர் குடியிருப்புகளில் நடக்கும் முறைகேடுகளை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது இல்லை. வீடு ஒதுக்கீடு பெற்ற போலீசார், மனைவி, குழந்தைகள் சொந்த ஊரில் இருந்தால், தங்களின் உறவினர்களுக்கு வீட்டை வழங்கிவிட்டு, அவர்கள் வெளியில் நண்பர்களுடன் தங்குகின்றனர். சொந்த வீடு கட்டிய போலீசார், காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டை மற்ற போலீசாருக்கு மேல் வாடகைக்கு விடுகின்றனர். காவலர் குடியிருப்பு வீட்டை, 5 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்ட சம்பவங்களும் நடந் துள்ளன. இது குறித்த புகார் காரணமாக, தற்போது மாநிலம் முழுதும் ஆய்வு நடக்கிறது. சென்னையில் வீட்டை வாடகைக்கு விட்டுள்ள 250 பேருக்கு 'மெமோ தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KOVAIKARAN
நவ 28, 2025 07:33

குடியிருப்புகளை வாடகைக்கு விட்டு சம்பாதித்த பணத்தை அந்த காவலர்களிடமும் அதிகாரிகளிடமும், அந்த ஏமாற்று வேலையைக் கண்டுகொள்ளாமல் விட்ட உயர் அதிகாரிகளிடமிருந்தும் அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யவேண்டும். ஆனால், இந்த ஊழல் திருட்டு தீய திமுக அரசு காவல்துறையைப் பகைத்துக் கொள்ளாது என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் மற்ற துறைகளிலும் நடந்திருக்கலாம். ஊழலில் ஊறிப்போன அரசு அதிகாரிகளுக்கு அரசை ஏமாற்றி இவ்வாறு சம்பாதிப்பதிலும் வெட்கமில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.


sivaram
நவ 28, 2025 07:11

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் ஊடுருவி கண் முன்னே தோன்றுவது சாத்தியமே. புரட்சி தலைவர் சொன்னது இன்று நடக்கிறது அன்றும் நடந்தது


Barakat Ali
நவ 28, 2025 06:08

எதையும் வாடகைக்கு உட்டு சம்பாதிப்பாங்க போல .....


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ