பொங்கல் பரிசு தொகுப்பு ஜன., 9 முதல் வினியோகம்
சென்னை:வரும், 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.21 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வரும் 2025 தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினரும் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு, 249.76 கோடி ரூபாய் செலவு ஏற்படும். மேலும், பொங்கலை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகள் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பொங்கல் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜன., 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு வினியோகம் துவங்கும். அதற்காக ஒவ்வொரு கார்டுதாரருக்கும் முன்கூட்டியே, 'டோக்கன்' வழங்கப்படும். அதில் குறிப்பிடப்படும் நாள், நேரத்திற்கு சென்று பொருட்களை பெறலாம்.