உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடியும் வழக்கறிஞர் தான்; ஆனால் கோர்ட் பக்கமே போகாதவர் * அமைச்சர் துரைமுருகன் கிண்டல்

பொன்முடியும் வழக்கறிஞர் தான்; ஆனால் கோர்ட் பக்கமே போகாதவர் * அமைச்சர் துரைமுருகன் கிண்டல்

சென்னை:''அமைச்சர் பொன்முடியும் வழக்கறிஞர் தான்; ஆனால், நீதிமன்றத்திற்கு போகாதவர்; அவர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே போவார்,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.தி.மு.க., சட்டத் துறையின் மூன்றாவது மாநில மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது. கீழ்பாக்கத்தில் உள்ள, ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடந்த மாநாட்டை, அக்கட்சியின் பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் துவக்கி வைத்தார். அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துரைமுருகன் பேசியதாவது: தி.மு.க.,வுக்கு வரக்கூடிய ஆபத்துக்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள, நமது சட்டத் துறை வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்களை மீறி, எவராலும் கட்சி மீது கை வைக்க முடியாது.அமைச்சர் பொன்முடியும் ஒரு வழக்கறிஞர் தான், ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு போகாதவர். அவருடைய வழக்கு விசாரணைக்கு மட்டுமே அங்கு செல்வார். அதேப்போல், அமைச்சர் ரகுபதியும் அதிகமாக கோர்ட்டுக்கு போகாதவர். இந்த விஷயத்தில் அவர்களை காட்டிலும் நான் 'ஜீரோ'. முன்பெல்லாம், சிலர் மட்டுமே வழக்கறிஞர் துறையை தேர்வுச் செய்தனர். அப்போது, தி.மு.க.,வுக்கு இருந்த, ஒரே வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன். அவர் நீதிபதியான பின், சண்முகசுந்தரம் தான் கட்சி சார்ந்த அனைத்து வழக்குகளையும் எடுத்து நடத்தினார். அதனாலே அவர், அ.தி.மு.க., ஆட்சியில் வெட்டிக் கொல்லப்பட்டார். அவருக்குப் பின், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தி.மு.க.,வுக்காக பாடுபட்டவர் சண்முகசுந்தரம். தி.மு.க.,வுக்காக அவர் பெரும் தியாகம் செய்திருக்கிறார்.நாட்டிலேயே நமது சட்ட அமைச்சர் தான், ஆண்மையுடன் குற்றங்களை எதிர்த்துக் கேட்கக்கூடிய வல்லமை பெற்றவர். இந்திய அரசியல் சட்டத்தை, மோடி அரசு படாதபாடு படுத்துகிறது. இன்றைக்கு மதச்சார்பின்மையை, ஒரு ஜனாதிபதி உச்சரிக்க மறுக்கிறார் என்றால், இந்த நாடு எங்கே செல்கிறது?தி.மு.க.,வுக்கு மத்திய அரசிடம் நம்பிக்கை உண்டா என்றால் இருக்கிறது. அது பலமாக இருக்க வேண்டும். ஆனால், எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசு தன்னகத்தே குவித்து வைத்துக் கொண்டு மாநில அரசுகளை தன்னுடைய கைப்பாவையாக வைத்திருக்கைப் பார்க்கிறது. அப்படி ஒரே இடத்தில் அதிகாரம் குவிக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

'டிகிரி மட்டும் தான் வாங்கினேன்;கோர்ட் பக்கமே போனதில்லை!'

அமைச்சர் பொன்முடி பேசியதாவது:ஜெயலலிதா காலத்தில் இருந்தே, என் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அமைச்சர் துரைமுருகன் கூறியதை போல், நான் சட்டம் பயின்று தேர்ச்சி பெற்று, 'டிகிரி' மட்டுமே பெற்றுள்ளேன்; கோர்ட்டுக்குள் சென்றதில்லை. தொழில் ரீதியில் கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமும் இருந்ததில்லை.ஒரு காலத்தில் சிலர் மட்டுமே, நீதிபதி மற்றும் வழக்கறிஞர் ஆகும் உரிமையை பெற்றிருந்தனர். சில நீதிமன்றங்களில், 'அவாள்' மட்டுமே இருந்த சூழ்நிலைகளை மாற்றி, அனைவரும் வர வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிடம். நீதிபதிகளாக இருந்தாலும், அரசு வழக்கறிஞர்களாக இருந்தாலும், அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Matt P
ஜன 19, 2025 14:04

இன்றைக்கு மதச்சார்பின்மையை, ஒரு ஜனாதிபதி உச்சரிக்க மறுக்கிறார் என்றால், இந்த நாடு எங்கே செல்கிறது?.- தொரை .திமுக ஒரு மதத்தை புறக்கணித்து மற்ற மதங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தான் ஆட்சி நடத்துகிறது. ..திமுக ஆட்சியில் தமிழ்நாடு எங்கே செல்கிறது என்றும் தான் கேட்க தோன்றுகிறது. ..மதச்சார்பின்மையை பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. பொன்முடி சட்டப்படிப்பு படித்தும் அந்த வேலை எனக்கு வேண்டாம். அமைச்சர் வேலை தான் பணம் பறிக்கும் தொழில் என்று இருந்துவிட்டு ..... என்று குறை கூறுவது சரியா? .... படித்தார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்தார்கள். எல்லோரும் சமம் என்பது நமது எண்ணமும். அமைச்சர் பொறுப்புகளில் இருந்து கொண்டு குறிப்பிட்ட ஜாதிகளை தாக்கி பேசுவது தவறான உதாரணம். காலப்போக்கில் எல்லோரும் முன்னேறிவதில் மகிழ்ச்சியே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை