சென்னை:''பாலியல் வன்கொடுமை தொடர்பாக, முதல்வர் அறிவித்த தண்டனைகளை, தி.மு.க., அனுதாபி ஞானசேகரனுக்கு பெற்றுத் தர வேண்டும்,'' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்தார்.நேற்று மாலை கவர்னர் ரவியை சந்தித்து, அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனு அளித்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, பொங்கல் பரிசாக, 5,000 ரூபாய் தர வேண்டும் என்றவர்களின் ஆட்சியில், 500 ரூபாய் கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., தேர்லின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை சம்பவத்தில், நான்கு மணி நேரம் கழித்து தான், வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கவர்னர் தெரிவித்தார். மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தி.மு.க., அனுதாபி என, முதல்வர் ஒப்புக் கொள்கிறார். அப்படி இருக்கையில், அவர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பர். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு, அதிகபட்ச தண்டனையாக துாக்கு தண்டனை அளிக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். அதை வரவேற்கிறோம். முதல் வழக்காக, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட, தி.மு.க., அனுதாபி ஞானசேகரனுக்கு, முதல்வர் அறிவித்தது போல், துாக்கு தண்டனை அளிக்க வேண்டும்.மக்களுக்கு எதிரான திட்டங்கள், மத்திய அரசின் கவனத்திற்கு, கொண்டு செல்லப்படுகிறது. டங்ஸ்டன் திட்டம் செயல்படுத்தப்படாது என, கவர்னர் தெரிவித்துள்ளார். மேலுாரை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இடைத்தேர்தலில், தே.மு.தி.க., நிலைப்பாடு, ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும். தி.மு.க., ஆட்சியில் நடக்கும் இடைத்தேர்தல்கள், அராஜகமாகத்தான் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.