காரைக்கால் துறைமுக விரிவாக்க பணி அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
காரைக்கால்: காரைக்காலில் மீன் பிடித்துறைமுக விரிவாக்கப் பணிக்கு பிரதமர் மோடி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். காரைக்காலில் புதுச்சேரி அரசு சார்பில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 131 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த மீன் பிடி துறைமுகம் விரிவாக்க பணி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. என்.ஐ.டி., வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றினார். பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதில், மீன் பிடித்துறைமுகம் உட்கட்டமைப்பு வசதிகள், திறன்மிகு வசதிகளுடன் கூடிய நீலம் மற்றும் பசுமை உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது. விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது: நாம் உலக அளவில் மீன் உற்பத்தியில், இரண்டாவது பெரிய நாடாக வளர்ந்து இருக்கிறோம். 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டக்கூடிய அளவுக்கு, 17 லட்சத்து 81 ஆயிரம் மெட்ரிக் டன் மீன் உணவை நாம் ஏற்றுமதி செய்கிறோம். இலங்கை கைது செய்த மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக புதுச்சேரியில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலை நாம் ஊக்கப்படுத்தி வருகிறோம். அதற்காக மானிய கடன்கள் தரப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.