சென்னை:பிரதமர் நரேந்திர மோடி, 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க, சென்னைக்கு நாளை மாலை வருகிறார். அன்று இரவு, சென்னை கிண்டி ராஜ்பவனில் தங்கும் மோடி, அடுத்த நாள் திருச்சி ஸ்ரீரங்கம், ராமநாதபுரம் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, 12ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டு வருகிறார்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலும்; திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்த புனித தலங்களாக திகழ்கின்றன.எனவே, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்தார்.அவர், 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க நாளை மாலை சென்னை வருகிறார். இரவு, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தங்குகிறார். அவர், மறுநாள் காலை, 8:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் செல்கிறார். காலை 11:00 மணிக்கு காரில், சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் மோடி, தாயார், ரெங்கநாதர் மற்றும் அங்குள்ள சன்னிதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார்.அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். அவர், ராமேஸ்வரத்தில் உள்ள, 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். அன்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். வரும், 21ம் தேதி காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் மோடி, சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார். பின், கலசத்தில் சேகரித்த, 22 புனித தீர்த்தத்தை எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.பிரதமர் வருகையை முன்னிட்டு, சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் திருச்சி போலீஸ் உயர் அதிகாரிகள், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், பிரதமர் செல்லும் வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
திருப்பூர் நிகழ்ச்சி ரத்து ஏன்?
சென்னை வரும் பிரதமர் மோடி, திருப்பூரில் நடக்கும் பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்க இருந்தார். இதற்கான ஏற்பாடுகளில் பா.ஜ.,வினர் ஈடுபட்டனர். தற்போது, கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, திருப்பூர் வடக்கு மாவட்ட பா,ஜ., தலைவர் செந்தில்வேல் கூறியதாவது: அயோத்தியில், 22ம் தேதி நடக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு, இரு நாள் முன் திருப்பூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இடைப்பட்ட நாட்களில் பிரதமரின் வேறு நிகழ்ச்சிகளில் மாறுதல் செய்ய வேண்டிய சிரமம் இருந்ததால், பொதுக்கூட்டத்தை வேறொரு நாளில் நடத்தலாம் என தலைமையால் அறிவுத்தப் பட்டது. அதன் அடிப்படையிலேயே, திருப்பூர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. வேறொரு நாளில் பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். பிரதமரின் பயண திட்டம் நாளை மாலை 5:00 மணிக்கு சென்னை வருகை. இரவு சென்னையில் தங்குகிறார். ஜன., 20ம் தேதி காலை விமானம் வாயிலாக திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில். மதியம் 12:55 மணிக்கு ஹெலிகாப்டர் வாயிலாக ராமேஸ்வரம். ஜன.,21 காலை, 11:20 மணிக்கு ஹெலிகாப்டர் வாயிலாக மதுரை விமான நிலையம். மதியம் 12:25 மணிக்கு டில்லி புறப்பாடு.