நெரிசலில் மூச்சு திணறல் பொதுமக்கள் கோஷம்
சென்னை: குடியரசு தின விழா கொண்டாட்டம். சென்னை காமராஜர் சாலையில், காந்தி சிலை அருகே நடப்பது வழக்கம். அங்கு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடப்பதால், உழைப்பாளர் சிலை அருகே நேற்று விழா நடந்தது. அப்பகுதியில், 300 மீட்டர் துாரத்திற்கு நடைபாதையில் பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு நாற்காலிகள் போடப்பட்டு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அமர வைக்கப்பட்டனர். அதே நேரம் எதிர்புறம் உள்ள நடைபாதையில், பந்தல் எதுவும் அமைக்கவில்லை. மேடைக்கு எதிரே கலை நிகழ்ச்சிகள் நடந்ததால், அங்கு 300 மீட்டர் துாரத்திற்கு நின்றிருந்தவர்கள் மேடை நோக்கி நகர ஆரம்பித்தனர். எழிலகம் வளாகம் அருகே, தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால், மேற்கொண்டு நகர முடியவில்லை.அதேநேரம் அங்கிருந்து வெளியே செல்லவும் முடியவில்லை. மந்தையில் அடைத்தது போல், பொதுமக்கள் சிக்கிக் கொண்டனர். வெயில் மற்றும் நெரிசல் காரணமாக, பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் மக்கள், தடுப்புகளை அகற்ற கோரி கோஷமிடத் துவங்கினர். இதையடுத்து தடுப்புகள் அகற்றப்பட்டன. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, வாலாஜா சாலைக்கு சென்றனர்.