மக்கள் பாதுகாப்பில் கடமை தவறும் அரசு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
கோவை:'மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழக முதல்வர் கடமை தவறுகிறார்' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னையில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நடத்திய கொலைவெறி தாக்குதலில், டாக்டர் பாலாஜி நுாலிழையில் உயிர் தப்பினார். தற்போது, தஞ்சையில் அரசு பள்ளி ஆசிரியை ரமணி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் கண்ணன் பட்டப்பகலில் வெட்டி சாய்க்கப்பட்டார்.அதேபோல, வேலுாரில், 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் என, தமிழக்தில் தினமும் வன்முறை சம்பவங்களும் விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்து வருகின்றன. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க கடமைப்பட்ட முதல்வர் ஸ்டாலின், இவைகள் குறித்தெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் அடுத்த தேர்தலுக்கு பரப்புரையை துவங்குகிறார்; கட்சி பணிகளிலே மும்முரம் செலுத்துகிறார்.தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயல் மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. எனவே, முதல்வர் தனது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.