தமிழக இளைஞர்களுக்கு குவாண்டம் கம்ப்யூட்டிங் பயிற்சி
சென்னை:தமிழக இளைஞர்களுக்கு, 'குவாண்டம் கம்ப்யூட்டிங்' தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி அளிப்பது குறித்து, ஜெர்மனியில் உள்ள, 'எக்சீட் கியூ' நிறுவனத்துடன், தொழில் துறை அமைச்சர் ராஜா பேச்சு நடத்தியுள்ளார். ஜெர்மனி நாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமைச்சர் ராஜா தலைமையில் அதிகாரிகள் குழு, அந்நாட்டிற்கு சென்றுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கம்ப்யூட்டரில், சி.பி.யு.,வில் உள்ள சிறிய, 'புராசசரில்' அதன் முழு இயக்கம் இருக்கிறது.வரும் காலத்தில் உலகம் முழுதும், அதிநவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய, 'குவாண்டம் கம்ப்யூட்டிங்' தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த தொழில்நுட்பம் தொடர்பாக, தமிழக இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து, எக்சீட் கியூ ஜி.எம்.பி.எச்., நிறுவனத்துடன் அமைச்சர் ராஜா பேச்சு நடத்தியுள்ளார். இதுகுறித்து, ராஜா அறிக்கை:குவாண்டம் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான சாத்தியக்கூறு மற்றும் அது தொழில் துறையில் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தும் என்பது குறித்து, எக்சீட் நிறுவனத்துடன் விவாதிக்கப்பட்டது. இதன் நிறுவனர், தமிழகத்தை சேர்ந்த கோபி பாலசுப்ரமணியன். தமிழக அரசு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்களை வளர்ப்பதில், அறிவு தலைநகராக தமிழகம் தொடர கவனம் செலுத்துகிறது. இத்தகைய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதால், எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் அறிவு சூழலை உருவாக்கவும், தமிழக இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பை பாதுகாக்கவும் விரும்புகிறோம். இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்கள், தமிழகத்தை அதிநவீன தொழில்நுட்ப திறன்களின் மையமாக மாற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.