உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் வீடுகளில் மீண்டும் ரெய்டு!

டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் வீடுகளில் மீண்டும் ரெய்டு!

சென்னை : மதுபானங்கள் விற்பனை மற்றும் கொள்முதலில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரில், 'டாஸ்மாக்' நிர்வாக இயக்குநர் விசாகன் உட்பட உயர் அதிகாரிகளின் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் 'ரெய்டு' நடத்தினர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, கடந்த மார்ச் 6 முதல், 8ம் தேதி வரை, சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் மற்றும் எஸ்.என்.ஜே., உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், மதுபான ஆலைகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

விசாரணை

அப்போது, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து, 'டெண்டர்' ஒதுக்கீடு ஆணைகள், மதுபான விலை நிர்ணய கடிதங்கள், மதுக் கூடம் உரிமம் வழங்குவது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர். அத்துடன், கடந்த நான்கு ஆண்டுகளில், மதுபான ஆலைகளில் இருந்து கடைகளுக்கு மது பாட்டில்களை எடுத்துச் செல்வதற்கான வாகன டெண்டர் ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல, பாட்டிலுக்கு, 10 - 30 ரூபாய் வரை கொள்முதல் விலையை உயர்த்தி பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் கைப்பற்றினர். அதன் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விசாகன், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதா, கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவு துணை பொது மேலாளர் ஜோதிசங்கர், சில்லரை விற்பனை பிரிவு பொது மேலாளர் ராமதுரைமுருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.மூவரின் மொபைல் போன்கள், இ - மெயில் தகவல்களையும் ஆய்வு செய்தனர். சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, விசாகன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது.

வழக்கு தள்ளுபடி

இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானதாக அறிவிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை என்றும் கூறி விட்டது.இதையடுத்து, சென்னை மணப்பாக்கம், சி.ஆர்.ஆர்.புரம் பகுதியில் உள்ள விசாகன் வீட்டில், நேற்று காலை 6:00 மணியில் இருந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டிற்கு வெளியே மறைவான இடம் ஒன்றில், ஆவணங்கள் கிழித்து எறியப்பட்டு கிடந்தன. அவற்றையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். 'பார் டெண்டர்' விவகாரம் தொடர்பாக, 'வாட்ஸாப் சாட்டிங்' மற்றும் இ - மெயில் தகவல் பரிமாற்றம் குறித்து, 'ஸ்கிரீன் ஷாட்' எடுக்கப்பட்டு, அதை காகித வடிவில் பிரின்ட் எடுத்து உள்ளனர். அவற்றை தான் கிழித்து வீசி எறிந்துள்ளனர் என்பதை கண்டறிந்தனர்.

பல கேள்விகள்

இந்த ஆவணங்கள், விசாகன் மொபைல் போன் மற்றும் இ - மெயில் முகவரியில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், விசாகனை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அமலாக்கத்துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, மதுபானங்கள் கொள்முதல், டாஸ்மாக் மதுக்கூடம் உரிமம், பணியிட மாறுதல் தொடர்பாக, முக்கிய புள்ளிக்கும், அவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் குறித்து, பல கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. விசாகனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது, அவரது மனைவி மற்றும் மகனிடமும், அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அதேபோல, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக, சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள, எஸ்.என்.ஜே., மதுபான நிறுவனத்தின் அலுவலகம், அண்ணா சாலையில் தொழிலதிபர் தேவகுமார் வீடு, பெசன்ட் நகரில் ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு, அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள தொழிலதிபர் மேகநாதன் வீடு உட்பட, 10 இடங்களிலும் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தொழிலதிபர் 'எஸ்கேப்'

விசாகன் வீட்டருகே துாக்கி வீசப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அதில், தி.மு.க.,வின் மேலிடத்திற்கு நெருக்கமான தொழில் அதிபர் ரத்தீஷ் உடன், டாஸ்மாக் மதுக்கூடம் டெண்டர் தொடர்பாக, 'வாட்ஸாப் சாட்டிங்' செய்யப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி., நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ரத்தீஷ் வீட்டிற்கு சென்றனர். அவர் ஓட்டம் பிடித்து விட்டார். எனினும் அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முதல்வரின் உறவினர் வீட்டில் 'ரெய்டு'

ஒரே நேரத்தில், 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படங்களை தயாரிப்பவரும், முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய உறவினருமான ஆகாஷ் என்பவர் வீட்டில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பாஸ்கரன். இவரது மகன் ஆகாஷ். இவர், 'டான் பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் வாயிலாக, சினிமா படங்களை தயாரித்து வருகிறார். ஒரே நேரத்தில், 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, தனுஷ் நடிப்பில், இட்லி கடை சிவகார்த்திகேயன் நடிப்பில், பராசக்தி அதர்வா நடிப்பில், இதயம் முரளி மற்றும் சிம்பு நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.குறுகிய காலத்தில், தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் ஆகாஷின் அபார வளர்ச்சி, தமிழ் திரையுலக வட்டாரத்தையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து; அவரது மகள் தேன்மொழியை, கடலுாரைச் சேர்ந்த தொழில் அதிபரும், 'கவின்கேர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன் திருமணம் செய்துள்ளார். இவர்களின் இரண்டாவது மகள் தாரணி. அவரது கணவர் தான் இந்த ஆகாஷ். முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய உறவினரான ஆகாஷ், தாரணி ஆகியோர், சென்னை தேனாம்பேட்டையில், கே.பி.என்.தாசன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஆகாஷ் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், ஆகாஷ் வீட்டில் நேற்று காலை 6:00 மணியில் இருந்து சோதனை நடத்தினர்; முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். ஆகாஷின் கார் ஓட்டுநரிடமும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Narayanan
மே 26, 2025 13:36

டாஸ்மாக் உயரதிகாரிகள் ஆவணங்களை டாஸ்மாக் அலுவலத்தில் பதுக்கிவைத்தால் அங்கேதான் சோதனை செய்யமுடியும். மேலும் முன்னரே தகவல் கொடுத்தால் இடம் மாற்றிவைக்கலாம் அல்லது எரித்துவிடலாம். உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இப்படி ஏன் ஒரு கேள்வி உதிக்கவில்லை ?


venugopal s
மே 17, 2025 22:07

கேரளாவில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடி பட்டது போல இங்கும் மாட்டிக் கொள்ளப் போகிறார்கள்! மண்டை பத்திரம்!


Veeraputhiran Balasubramoniam
மே 17, 2025 19:09

முதல் தலைமுறை தொழில் முனைவோர் விரைவில் எப்படி அபார வளர்ச்சி அடைகிறனர் என்பது தெரியாமலேயே உள்ளது.. எவ்வளவு தான் குட்டி கரணம் போட்டாலும் ஒரு நிலைக்கு மேல் வளர முடிய வில்லை என வருந்துவோர் பலர்.... புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்வது போல் பல முதல் தலை முறை தொழில் முனைவர் தொழில் துவங்கி கையிருப்புகளை காலி செய்தது தான் அதிகம்... உதாரணம் இந்த ஷாம்பு நிறுவனம் திடீரென்று உருவாகி வளர்ந்து பல ஆயிரம் கோடி நிறுவனமாக முதல் தலைமுறையே கடின உழைப்பால் சாதித்தது போல் பொதுவெளியில் மேடைகளில் பேசி இளைஞர்களை உசுப்பேத்தி வருகின்றனர் ... இது போன்ற "உண்மையின் உரை கல்லின்" தகவல் மூலம் தான் இதுவும் ஒரு குடும்ப பின்னணி இணைந்த பின் வந்த வளர்ச்சி என புரிகிறது... இளைஞர்களே உஷார் ... புலியய் பார்த்து சூடு போடாமல் பூனை குட்டியாக பிறந்தாலும் ,புலி குட்டியுடன் வளர்ந்து போரடி வெற்றி பெறுவது எப்படி என்கிற நேக்குகளை கற்று முயர்சி செய்யுங்கள், நம்பிக்கையுடன் கூடிய உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் சிறிது கால தாமதம் ஆகலாம் அவ்வளவு தான்


மொட்டை தாசன்...
மே 17, 2025 10:54

அரசியல் வாதிகள் நாட்டை கொள்ளையடிப்பதற்கு மக்களாகிய நாமும் ஒரு காரணம் . இன்றைய காலகட்டத்தில் யாராவது அநியாயமாக சொத்துசேர்த்தால் மக்கள் சொல்லுவது " அவன் உஷாரா சொத்து சேத்திவிட்டான் , அவன் சாமர்த்தியசாலி ". அதே அரசியல்வாதியை அடுத்த தேர்தலில் நாமும் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கிறோம் . மக்கள் மனநிலை இப்படியிருக்கையில் பல்லாயிரம் கோடிகளை திருடியது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை . மக்கள் மாறும் வரை அரசியல்வாதிகள் மாற வாய்ப்பில்லை .


angbu ganesh
மே 17, 2025 09:32

பத்தோட 11 மாதிரி விட்டுவுவீங்க ஜெகத்ரட்சகன் கத என்னாச்சு ரெய்டு நடத்தினா அதுல முழுமை அடையுங்க. அதா விட்டுட்டு இப்போ பாருங்க விஜய் ஒரு கட்சி ஆரம்பிச்சிட்டேன். இனி அவனை தொட முடியாது அவன் எவ்ளோ என இந்தியாவை ஏமாத்தி கருப்ப வெள்ளையாக்கலாம். அதுக்கு ஒரு கட்சி தேவை ஆரம்பிச்சிட்டான், இப்படித்தான் திருடனுங்க தப்பிக்கறானுங்க.


sundar
மே 17, 2025 08:52

டாஸ்மாக் விசாகன் ஒரு முக்கிய புள்ளியுடன் பேசினார். யார் தா முக்கியப்புள்ளி அல்லது சார்ர்?


D Natarajan
மே 17, 2025 07:48

திருடன். வெட்கமே இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது. ஏன் இன்னும் கைது செய்யவில்லை. மக்களே 2026ல் உங்கள் வோட்டை சரியான முறையில் பயன்படுத்தவும்


ராமகிருஷ்ணன்
மே 17, 2025 07:30

லட்சம் கோடிகளில் ஊழல் செய்து புகழ்பெற்ற கட்சியை வெறும் 1000 கோடி ஊழல் என்று அசிங்கப்படுத்த வேண்டாம். திமுகவினர் கோபப்படுகிறார்கள்.


Palanisamy Sekar
மே 17, 2025 06:28

எவ்வளவோ மறைத்தும் கூட இவ்வளவு ஊழல் பணம் இருக்கின்றது என்றால் அப்புறம் ஏன் சொல்ல மாட்டார்கள் 2036யிலும் 2050 வரையிலும் திமுக ஆட்சி என்று. ஒரு ஓட்டுக்கு 10000 ரூபாய் வரையிலும் கொடுக்க முடியும். நான்கரை லட்சம் கோடி பணத்தை கூட வருகின்ற சட்டமன்ற தேர்தல்களுக்கு பயன்படுத்த வாங்கி இருப்பாங்களோ ன்னு சந்தேகமா இருக்கு. அமலாக்க துறையே விரைந்து கைது செய். செந்தில் பாலாஜி போல கைது செய்யப்படுகின்ற எவரும் ஜாமீன் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளணும்


Palanisamy Sekar
மே 17, 2025 06:02

இந்த ஊழல் ஆட்சியில் யார்தான் யோக்கியவான்னு தேடுனா கூட கிடைக்காது போல. யாரைப்பார்த்தாலும் ஊழல்வாதியாகவே இருக்காங்க. ஆட்சியாளர்கள் மட்டுமில்லை அரசு அதிகாரிகளும் போட்டிபோட்டுக்கொண்டு சம்பாதிக்கின்றார்கள். நான்கரை லட்சம் கோடி கடன் வாங்கியதற்கான விவரங்களை கோர்ட்டில் கேட்க முடியும்தானே? இப்போதெல்லாம் எங்கே போனார்கள் இந்த சமூக ஆர்வலர்கள் போர்வையில் இருப்போர். சாராய விஷயத்தில் தமிழகம் ரொம்பவே தள்ளாடுது, சாராய நெடி தூக்கலாகவே இருக்கிறது. போதையில் இளைஞர்களும் யுவதிகளும் இருக்க காரணமே இந்த டாஸ்மாக் தான். தேர்தல் சமயத்தில் சத்தியம் செய்தார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது என்கிறாரே.. இப்போதாவது பொதுஜனங்களாவது கேட்பார்களா? இளம் விதவைகள் தமிழகத்தில் தான் அதிகம் என்று மூக்கை சிந்திய கனிமொழிக்கு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சாராய ஆலையையே திறந்து பணம் கொழிக்கின்றாராம். அவரிடமாவது கேளுங்கள் பொது ஜனங்களே. ரெய்டு விடுவதோடு சரி..கைது செய்தால்தான் என்போன்றோருக்கு நிம்மதியான நாளாக அமைந்திடும்.


முக்கிய வீடியோ