பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து 13 பேரிடம் ரயில்வே குழு விசாரணை
சென்னை:பள்ளி வேன் மீது ரயில் மோதியது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் குழு விசாரணை துவங்கி உள்ளது.கடலுார் மாவட்டம், ஆலப்பாக்கம் கிராமத்தில், நேற்று முன்தினம் காலை 7:45 மணிக்கு நான்கு மாணவர்களுடன் சென்ற பள்ளி வாகனம், கடலுார் - ஆலப்பாக்கம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, விழுப்புரம் - - மயிலாடுதுறை பயணியர் ரயில் மோதியதில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த ஒரு மாணவர், ஓட்டுநர் சிகிச்சை பெறுகின்றனர்.தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சம்பவ இடத்தை ஆய்வு செய்து, முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மற்றொரு புறம், ரயில்வே போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே, தெற்கு ரயில்வே அமைத்துள்ள மூவர் குழு நேற்று விசாரணையை துவக்கி உள்ளது. சம்பந்தப்பட்ட ரயில் கேட் கீப்பர், ஆலப்பாக்கம் ரயில் நிலைய மேலாளர், ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர், தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள் உட்பட, 13க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:விசாரணை நடத்தி, விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களை தடுப்பது குறித்து, சில வழிகாட்டு முறைகள் வகுக்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.முதற்கட்ட விசாரணையில், விழுப்புரம் - மயிலாடுதுறை பயணியர் செல்லும்போது, 170 எண் கொண்ட ரயில்வே, 'லெவல் கிராசிங்' கதவு மூடப்படாமல் இருந்த தகவல் தெரியவந்துள்ளது. முதல் ஆதாரமாகிறது 'வாய்ஸ் ரிக்கார்டர்'
ரயில் வருவது பற்றி, கேட் கீப்பரிடம் ஸ்டேஷன் மாஸ்டர் தெரிவித்தாரா; ரயில்வே கேட் மூடப்பட்டது குறித்து, ஸ்டேஷன் மாஸ்டரிடம் அவர் சொன்னாரா என்பது தொடர்பான உரையாடல், 'வாய்ஸ் ரிக்கார்டரில்' பதிவாகி இருக்கும். வேன் மீது ரயில் மோதியது குறித்த விசாரணையில், இதுதான் முதல் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2023ல் செப்டம்பர் முதல் இந்த நடைமுறை இருக்கிறது. கேட் கீப்பரும், ஸ்டேஷன் மாஸ்டரும் மட்டும் பேசக்கூடிய இந்த பிரத்யேக தொலைபேசி வசதி இருக்கிறது. இதில், ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் உள்ள தொலைபேசியில், 'வாய்ஸ் ரிக்கார்டர்' வசதி இருக்கும். அதில் இருவருக்கும் இடையேயான உரையாடல் பதிவாகும். ஆறு மாதங்கள் வரை இதில் பதிவுகள் இடம்பெறும். விபத்து நடந்தால் இந்த உரையாடல் பதிவை எடுத்து, இருவரும் பேசியதை ஆராய்ந்து பார்ப்பது வழக்கம்.