உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திட்டி தீர்த்த ராம சுகந்தன்: ராமதாசுடன் திடீர் சந்திப்பு

திட்டி தீர்த்த ராம சுகந்தன்: ராமதாசுடன் திடீர் சந்திப்பு

சென்னை: 'வன்னியர் சமுதாயத்தை வைத்து வியாபாரம் செய்கிறார்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாசை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ராம சுகந்தன், நேற்று முன்தினம் ராமதாசை சந்தித்து பேசினார்.பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 27ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். 'இது, தி.மு.க.,வின் சூழ்ச்சி' என பா.ம.க., தலைவர் அன்புமணி விமர்சித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனுமான ராம சுகந்தன், நேற்று முன்தினம் தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து பேசினார்.பின்னர் பேட்டியளித்த அவர், 20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரம் வந்துள்ளேன். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் ராமதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். என் தந்தை வாழப்பாடி ராமமூர்த்தி உடனான நினைவுகளை அப்போது பகிர்ந்து கொண்டார்.மற்றபடி, பா.ம.க., பிரச்னைகள் குறித்தோ, வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தோ எதுவும் பேசவில்லை. ஆனால் ராமதாஸ், 'அடிக்கடி என்னை வந்து சந்திக்க வேண்டும்; நிறைய பேச வேண்டும்' என அன்பு கோரிக்கை விடுத்தார். நானும் வருவதாக சொன்னேன். கடந்த 2014 லோக்சபா தேர்தலில், தர்மபுரி தொகுதியில் அன்புமணியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் ராம சுகந்தன் போட்டியிட்டார். அப்போது, ராமதாஸ் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார். கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், 'வன்னியர் சமுதாயத்தை ஏமாற்ற, பழனிசாமி கொண்டு வந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. 'இந்த நாடகத்திற்கு துணையாக இருந்த ராமதாஸ், வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இனிமேல் வன்னியர் சமூகத்தை வைத்து, வியாபாரம் செய்ய வேண்டாம்' என ராம சுகந்தன் விமர்சித்தார். இப்படி, வன்னியர் சமூகத்துக்காக உள் ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் ராமதாசை சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்துவிட்டு, திடீரென ராம சுகந்தன், தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று ராமதாசை சந்தித்து பேசியிருப்பது மிகப்பெரிய நாடகம்.இதன் பின்னணியில் வழக்கம் போல தி.மு.க., இருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என்றும் அன்புமணி ஆதரவாளர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை