உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமியை சந்திக்க ராமதாஸ் விருப்பம்; சண்முகத்துடன் தைலாபுரத்தில் ஆலோசனை

பழனிசாமியை சந்திக்க ராமதாஸ் விருப்பம்; சண்முகத்துடன் தைலாபுரத்தில் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாசை, அவரது தைலாபுரம் வீட்டில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று சந்தித்துப் பேசினார். திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு வந்த சண்முகம், தன் சகோதரர் மகன் திருமண அழைப்பிதழ் வழங்கி, அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது, நடப்பு அரசியல் சூழல் குறித்து, இருவரும் பேசியுள்ளனர். அப்போது, 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கும் விருப்பத்தை, ராமதாஸ் வெளிப்படுத்தியுள்ளார். 'பழனிசாமியை சந்திக்க வேண்டும். தைலாபுரம் தோட்டத்திலோ, பொது இடத்திலோ பழனிசாமியை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என, ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு பழனிசாமியிடம் பேசி ஏற்பாடு செய்வதாக, சண்முகம் உறுதி அளித்துள்ளார்.

குற்றச்சாட்டு

கடந்த, 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வை சேர்க்க, சண்முகம் தீவிர முயற்சி மேற்கொண்டார். இதற்காக, தைலாபுரத்தில் ராமதாசை பலமுறை சந்தித்துப் பேசினார். ஆனால், கடைசி நேரத்தில் பா.ஜ.,வுடன் பா.ம.க., கூட்டணி அமைத்தது. இதற்கு அன்புமணி மற்றும் அவரது மனைவி சவுமியாவின் பிடிவாதம் காரணம் என, ராமதாஸ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார். அப்பா -- மகன் மோதலால், பா.ம.க., இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமதாஸ் - - சண்முகம் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக, ராமதாஸ் தரப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதில், ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். அதற்காக, சண்முகத்துடன் தொடர்ந்து பேசி வருகிறார். பா.ம.க.,வில் குழப்பங்கள் நீடிப்பதால், விரைவில் பிரச்னைகள் தீர்ந்து, இரு தரப்பும் ஒன்றாகும் என அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி உறுதியாக நம்புகிறார். அதனால், வரும் ஜனவரியில் கூட்டணியை முடிவு செய்யலாம் என, அவர் கூறி வருகிறார்.

எதிர்பார்ப்பு

ஆனால், விரைவிலேயே கூட்டணியை முடிவு செய்யும் பட்சத்தில், அன்புமணி பக்கம் உள்ள மாவட்டச் செயலர்கள், முக்கிய நிர்வாகிகள் தன் பக்கம் வந்து விடுவர் என ராமதாஸ் நினைக்கிறார். அதற்காக பழனிசாமியை விரைவில் சந்திக்க முடிவு செய்துள்ளார். அதோடு, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் தான் இணையும் பட்சத்தில், 30 சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என்பது தன்னுடைய எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் சண்முகத்திடம் தெரிவித்துள்ளார். தகவல் அனைத்தையும் பழனிசாமியிடம் சொல்வதாக சண்முகம் சொல்லிச் சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை