ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு போட்டித்தேர்வு நடத்த ராமதாஸ் கோரிக்கை
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நிருபர்களிடம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:கூட்டுறவுத் துறை மூலம் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு 2000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எந்த பணி நியமனத்திலும் நேர்காணலில் முறைகேடு நடக்கிறது. போட்டித்தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னை, காமராஜர், பாரதியார், அண்ணா பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி கிலோ 120க்கும், வெங்காயம் 80 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. இவற்றை தமிழக அரசு மொத்தமாக கொள்முதல் செய்து பல்பொருள் அங்காடி, ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் விற்க வேண்டும்.மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மின்துறையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்கள் ஒழிக்கப்படும். மின்வாரியத்தில் ஆள் குறைப்பு திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அரசும், சாம்சங் நிறுவனமும் அங்கீகரிக்க வேண்டும்.ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பா.ம.க., சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த வி.சி.,கட்சி நிர்வாகியை தாக்கியது தவறு. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.