பாதுகாப்பு கேட்டு ராமதாஸ் தனி செயலர் டி.ஜி.பி.,யிடம் மனு
சென்னை:உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கேட்டு, டி.ஜி.பி.,யிடம் பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தனிச் செயலர் சுவாமிநாதன் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, டி.ஜி.பி.,க்கு அவர் அளித்துள்ள புகார்: பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தனி செயலராகவும், பா.ம.க., செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறேன். சென்னை பாலவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த 2004 முதல் 2024 வரை, பா.ம.க., தலைவர் அன்புமணியின் தனி செயலராக இருந்தேன். கருத்து வேறுபாடுகளால், அவரிடம் இருந்து வெளியே வந்து விட்டேன். நேற்று முன்தினம் இரவு 8:15 மணிக்கு, பாலவாக்கம் கடற்கரையில் மனைவி, மகனுடன் டீ குடித்து கொண்டிருந்தேன். அங்கு வந்த மர்ம நபர்கள், 'ராமதாசுக்கு இனி எந்த உதவியும் செய்யக் கூடாது. மனைவி, மகன் மீது அக்கறை இருந்தால், பாலவாக்கத்தில் இருந்து வெளியேறி விடு' என, மிரட்டினர். இதன் பின்னணியில், அன்புமணி மற்றும் அவரது மனைவி சவுமியா இருப்பதாக சந்தேகிக்கிறேன். எனவே, அவர்கள் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.