இந்திய மருத்துவ முறை படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
சென்னை:சித்தா போன்ற இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில், 4,371 பேர் இடம் பெற்றுள்ளனர். 'நீட்' தேர்வில், 720க்கு, 520 மதிப்பெண் பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி டி.எஸ்.பிரகதி முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், 'நீட்' தேர்வில், 512 மதிப்பெண் பெற்ற ஜி.டி.இனிய சுதர்சன், 509 மதிப்பெண்கள் பெற்ற ஆர்.பாவேஷ் ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு, https://tnayushselection.org என்ற இணையதளத்தில், வரும் 8ம் தேதி காலை 10:00க்கு துவங்கி, 11ம் தேதி மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது.