உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேட் கேர்ள் படத்துக்கு தணிக்கை சான்று தரக்கூடாது; ஐகோர்ட்டில் ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கம் வழக்கு

பேட் கேர்ள் படத்துக்கு தணிக்கை சான்று தரக்கூடாது; ஐகோர்ட்டில் ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கம் வழக்கு

சென்னை: வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள, பேட் கேர்ள் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. விருதுகளை வென்ற படங்களை தயாரித்தவர் வெற்றிமாறன். இவரின் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில், பேட் கேர்ள் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.படத்தின் டீசரான முன்னோட்டக் காட்சிகள், கடந்த மாதம், 26ல் வெளியாகின. ஹிந்து மத கலாசாரத்தையும், பிராமண சமுதாயத்தின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்திலும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, இப்படத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்க நிறுவன தலைவர் எஸ்.ராமநாத் என்பவர், பேட் கேர்ள் திரைப்படத்துக்கு தணிக்கை சான்று அளிக்கக்கூடாது என, வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது மனு விவரம்:படத்தின் டீசரில், பிராமண பெண், நாகரிக கலாசாரத்துக்கு மாறும் வகையிலும், பிராமண சமுதாய பெண்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுஉள்ளன. 'டீசர்' வெளியானதில் இருந்து, சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பிராமண சமுதாயம் குறித்து தரம் தாழ்த்திப் பேசப்படுகிறது. பிராமணர்களின் மனம், உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும்.அதுவரை, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், இத்திரைப்படத்துக்கு தணிக்கை சான்று அளிக்கக்கூடாது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம், கடந்த மாதம், 30ல் அளித்த புகார் மனு மீது, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்நிலையில், பிராமணர்களையும், பிராமண பெண்களையும் அவமதிக்கும் வகையில், பேட் கேர்ள் படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளதால், படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும், உலக பிராமணர்கள் நலச்சங்க தலைவர் கே.சிவநாராயணன், 'சென்சார் போர்டு'க்கு புகார் மனு அளித்துள்ளார்.இதேபோல, 'இப்படத்துக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் எந்த மத பழக்க வழக்கங்களையும், சமுதாய கலாசாரத்தையும் சீரழிக்கும் திரைப்படத்தையும் திரையிட அனுமதிக்கக்கூடாது' என, தமிழ்நாடு பிராமண சங்கத் தலைவர் கோவை சி.ஜி.வி.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ