அசல் தாய்பத்திரம் கேட்காமல் பதிவு அமல்படுத்த பதிவுத்துறை உத்தரவு
சென்னை:'அசல் தாய்பத்திரத்தை கேட்காமல், பத்திரப்பதிவு செய்யலாம்' என, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. 'சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்யும்போது, அதில் தொடர்புள்ள தாய்பத்திரத்தின், அசல் பிரதியை சரி பார்க்க வேண்டும்' என, பதிவு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்தது. இது 2022ல் அமலுக்கு வந்தது. இதன்படி, அசல் தாய்பத்திரத்தை, தாக்கல் செய்யாதவர்களின் பத்திரங்களை, பதிவுக்கு ஏற்காமல் நிராகரிக்க, சார் - பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த அதிகாரத்தை சார் - பதிவாளர்கள் பயன்படுத்தும் நிலையில், சில பிரச்னைகள் ஏற்பட்டன. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், ஒரு குறிப்பிட்ட சொத்து தொடர்பான விடுதலை பத்திரத்தை, பி. பாப்பு என்பவர், 2023ல் தாக்கல் செய்தார். அசல் தாய்பத்திரம் இல்லை என்ற காரணத்தால், அதை பதிவு செய்யாமல் சார் -பதிவாளர் நிராகரித்தார். இதை எதிர்த்து பி. பாப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர், மனுதாரரிடம் அசல் தாய்பத்திரம் கேட்காமல், தன் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு மேற்கொள்ளலாம்' என, கடந்த செப்.,27ல் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து, ராசிபுரம் சார் - பதிவாளர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம், இம்மாதம் 3ம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சார் - பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை, பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி., அனைத்து டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ளார்.