நெற்பயிர் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: தமிழக அரசுக்கு நயினார், சீமான் வலியுறுத்தல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நெற்பயிர் நீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்த 8,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மன வேதனையளிக்கிறது. அறுவடை செய்து 10 நாட்கள் கழிந்தும் நெல்மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் பல மாத உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ள திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் திமுக அரசு நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும். ஆனாலும், அலட்சியப்போக்குடன் செயல்பட்டு, நெல்மூட்டைகளை சேதப்படுத்தியது மட்டுமன்றி அறுவடைக்குத் தயாராக இருந்த 1,00,000-ற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்களையும் தண்ணீரில் மிதக்கவிட்டு விவசாயப் பெருமக்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது திமுக அரசு.எனவே, “நானும் டெல்டாக்காரன் தான்” என விளம்பர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின், அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகக் கொள்முதல் செய்திடவும், பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கர் ரூ.50,000 வீதம் நிவாரணம் வழங்கிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதான் திராவிட மாடலா?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா?ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, வெயிலிலும் மழையிலும் தங்கள் கடின உழைப்பினால் விளைவித்த நெல்மணிகளுக்கு உரிய விலை வேண்டியும், உரிய விவசாயிகள் காலங்காலமாகப் போராடி வருகின்றனர். ஆனால், திராவிட மாடல் திமுக அரசு உற்பத்தி செலவுக்கு இணையான, மிகக்குறைந்த கொள்முதல் விலையை மட்டுமே நிர்ணயித்து விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகின்றது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் விவசாயிகளிடமிருந்து 40 ரூபாய் பெறப்படும் முறைகேட்டினைத் தடுக்க திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அமைச்சர்களுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல் மூட்டைகள் தொடங்கி ஆளுங்கட்சி பிரமுகர்கள் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் நெல் மூட்டைகளை யெல்லாம் கொள்முதல் செய்த பிறகே ஏழை விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் அவலம் மாறுவது எப்போது?தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைத் தடுத்து, எவ்வித கையூட்டுக்கும் இடமளிக்காமல் சரியான எடையில், சரியான கொள்முதல் விலையை குறுவை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டுமெனவும், தற்போதைய கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரி படுகை சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.