உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இருமல் மருந்து நிறுவன அதிபர் வீட்டில் லஞ்ச ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

இருமல் மருந்து நிறுவன அதிபர் வீட்டில் லஞ்ச ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை:'கோல்ட்ரிப்' இருமல் தயாரிப்பு நிறுவன அதிபர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வீடுகளில் நடத்திய சோதனையில், லஞ்சம் தரப்பட்டது தொடர்பான ஆவணங்கள் சிக்கி இருப்பதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை சுங்குவார் சத்திரத்தில் செயல்பட்டு வந்த, 'ஸ்ரீசன் பார்மசூட்டிகல்' என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' எனும் இருமல் மருந்து குடித்து, ராஜஸ்தான், ம.பி., மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில், 26 குழந்தைகள் பலியாகினர். இது தொடர்பாக, மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் ஸ்ரீசன் பார்மசூட்டிகல் நிறுவன உரிமையாளர் ரங்கநாதன், 75, என்பவரை கைது செய்து, 10 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பணபரிமாற்றம் இந்நிலையில், இந்நிறுவனம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதன் வீடு, நிறுவனம் மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தீபா ஜோசப், கார்த்திகேயன் உள்ளிட்டோரின் வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரங்கநாதன் மற்றும் அவர் நடத்தி வந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து, மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் பிற அரசு துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. லஞ்சப்பணம் பெற்ற முக்கிய புள்ளிகள் குறித்து, ஆங்கிலத்தில் சுருக்கமாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த எழுத்துகள் குறிக்கும் நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சிக்குவர் ரங்கநாதன் வீட்டில் இருந்து, 'ஹார்ட் டிஸ்க்' மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட, 'டிஜிட்டல்' ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம். அவற்றில் இருந்த தகவல்களையும் திரட்டி உள்ளோம். ம.பி., மாநில போலீசாரும், ரங்கநாதனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர். எங்களின் விசாரணை மேலும் விரிவடைய உள்ளது. சில முக்கிய புள்ளிகள் சிக்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி