பனை பொருள் அங்காடி ஊர்தோறும் திறக்க கோரிக்கை
சென்னை:'ஆவின், அமுல் விற்பனை நிலையம் போல, ஊர்தோறும் பனை பொருட்களை விற்பனை செய்ய, அரசு சிறப்பு விற்பனை அங்காடிகள் திறக்க வேண்டும' என, அரசுக்கு பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர். தமிழகத்தில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்கள் உள்ளனர். கருப்பட்டி, பனங்கற்கண்டு, நுங்கு, பனை ஓலை பொருட்கள் உற்பத்தியில், துாத்துக்குடி, ராமநாதபுரம், கடலுார், திருநெல்வேலி, நாகை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகம் ஈடுபட்டு உள்ளனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை போல, தமிழகத்திலும் தடையில்லா கள் உற்பத்திக்கு, அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது, பனை தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கை. தமிழகத்தில் ஆண்டுதோறும், மார்ச் முதல் மே வரை மூன்று மாதங்களுக்கு மட்டுமே, அரசு தரப்பில் பனை மரம் ஏற அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், மூன்று மாதங்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே, பனை தொழிலாளர்கள் ஆண்டு முழுதும் குடும்பம் நடத்த வேண்டிஉள்ளது. எனவே, பனை தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்கும் வகையில், ஆவின், அமுல் விற்பனை நிலையங்களை போல், ஊர்தோறும் பனை பொருட்கள் விற்பனை அங்காடிகளை, அரசு திறக்க வேண்டும் என, 'பனையெனும் கற்பகத்தரு' அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் கவிதா காந்தி கூறுகையில், ''மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் உற்பத்தில் ஈடுபடுவோர், அவற்றை விற்க வசதி இன்றி, பஸ், ரயில் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். ''பனை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கான, அரசு காப்பீட்டுத் தொகையை, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்,'' என்றார்.