சென்னை: 'போதைப் பொருட்கள் நடமாட்டத்தால் மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டதற்கு, தி.மு.க.,வே காரணம். அதற்கு தார்மீக பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, கவர்னர் ரவியை சந்தித்தும் நேற்று மனு அளித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்றார்; கவர்னர் ரவியை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தார். கவர்னர் உடனான சந்திப்புக்கு பின், அவர் அளித்த பேட்டி:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ijradkqu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதேநிலை தொடர்ந்தால், தமிழக இளைஞர்கள், பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி, தமிழகம் சீரழியும் நிலை ஏற்படும் என்பதை கவர்னரிடம் தெரிவித்தோம்.ஏற்கனவே நான் பலமுறை கவர்னரை சந்தித்து மனு கொடுத்தபோது, போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தேன்.அலட்சியம்
தி.மு.க., அரசின் அலட்சியம் காரணமாக, தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளதை, கவர்னரிடம் எடுத்துக் கூறினோம். இது தொடர்பாக, விளக்கமான அறிக்கையை அளித்துஉள்ளோம். தி.மு.க., அயலக அணி சென்னை மேற்கு மாவட்ட துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், சமீபத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், மூன்று ஆண்டுகளாக போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளார். வெளிநாடுகளுக்கு, 45 முறை போதைப்பொருள் கடத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது. அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை, திரைப்படம் தயாரிப்புக்கு செலவழித்துள்ளார்; ஹோட்டல் நடத்துகிறார். தி.மு.க., நிர்வாகிகளுக்கு பணம் அளித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உதயநிதி அறக்கட்டளைக்கு பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.இன்னும் பல்வேறு அரசியல் தொடர்புடையவர்களுக்கும் அவர் நெருக்கமாக இருந்துள்ளார். இது, விசாரணையில் தெரிவிக்கப்படும் என, அவரை கைது செய்த அதிகாரி கூறியுள்ளார்.ஜாபர் சாதிக், டி.ஜி.பி.,யிடம் நற்சான்றிதழ் பெற்றுள்ளார். முதல்வர் மற்றும் உதயநிதியை சந்தித்து நிதி அளித்துள்ளார். முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இயக்கிய படத்திற்கு, போதைப்பொருள் விற்பனை வாயிலாக கிடைத்த பணத்தை வழங்கி உள்ளார்.இது, முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்; குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்.போதைப்பொருள் கடத்தலில் வந்த பணத்தை வைத்து, தி.மு.க., தேர்தலை சந்திப்பதாக செய்தி வந்துள்ளது. மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டதற்கு, தி.மு.க.,வே காரணம்.எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; இதை, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தவறில்லை
போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரி கிடைத்த தகவலை கூறுகிறார்.தி.மு.க.,வுக்கு ஏன் நடுக்கம் வருகிறது? நிரபராதி என்றால் எதையும் சந்திக்க வேண்டியது தானே. குற்றவாளியை கண்டுபிடித்ததும், அதிகாரி கிடைத்த தகவலை தெரிவித்துள்ளார். இதில், என்ன தவறு உள்ளது.இவ்வாறு பழனிசாமி கூறினார்.தி.மு.க., ஆட்சி மூன்று ஆண்டுகளாக தொடர்கிறது. அ.தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதற்கேற்ப செயல்படவில்லை. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அந்த இடத்தை பிடித்துக் கொண்டார் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. காரணம், அந்த அளவுக்கு ஆளுங்கட்சிக்கு எதிராக, மென்மையான போக்கையே பழனிசாமி கடைப்பிடித்தார். இதுவரை பல்வேறு பிரச்னைகளில், தி.மு.க.,வை கண்டித்தும், வலியுறுத்தியும் அறிக்கை விட்ட பழனிசாமி, முதல்வர் பதவி விலகும்படி கோரியதில்லை. தற்போது முதல் முறையாக முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், தி.மு.க., அரசை கண்டித்து, கடந்த வாரம் அ.தி.மு.க., சார்பில், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாளை நகர்ப்புற உள்ளாட்சிகளில், மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது.