உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அம்பேத்கர் மணிமண்டபத்தில் மரியாதை; ஹிந்து மக்கள் கட்சிக்கு அனுமதி

 அம்பேத்கர் மணிமண்டபத்தில் மரியாதை; ஹிந்து மக்கள் கட்சிக்கு அனுமதி

சென்னை: அம்பேத்கர் நினைவு நாளில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்த, ஹிந்து மக்கள் கட்சிக்கு அனுமதி வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு தினம், வரும் 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம், ஹிந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில், மரியாதை செய்ய அனுமதிக் கோரி, அக்கட்சி நிர்வாகி அருண்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவில், 'அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு மரியாதை செலுத்த செல்லும் முயற்சியை, மாற்று கட்சியினர் தடுப்பதால், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோருக்கு, காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், 'இதற்கு முந்தைய ஆண்டுகளில், ஹிந்து மக்கள் கட்சியினர், அம்பேத்கர் சிலைக்கு, காவி உடை அணிவிக்கும் செயலில் ஈடுபட்டதால், மாற்று கட்சியினர், அவர்களை மரியாதை செய்ய விடாமல் தடுத்தனர்' என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில், 'காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளின்படி மட்டுமே செயல்படுவோம்' என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, அம்பேத்கரின் புகைப்படத்தை மாற்றி அமைத்து பேனர் எதுவும் எடுத்து செல்லக்கூடாது; அனுமதிக்கப்பட்ட 25 நபர்களை தவிர, கூடுதலாக கூட்டம் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன், ஹிந்து மக்கள் கட்சியினர், அம்பேத்கர் மணிமண்டபத்தில் மரியாதை செய்ய அனுமதித்து உத்தரவிட்டார். மேலும், 'நிபந்தனைகளை மீறி செயல்பட்டால், உடனே சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என, காவல் துறைக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ