ரிதன்யா வழக்கு கணவன் குடும்பத்திற்கு ஜாமின்
சென்னை:திருப்பூரைச் சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில், அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவினாசி கைகாட்டி புதுாரை சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரை மகள் ரிதன்யா, திருமணமான இரண்டரை மாதத்தில், ஜூன் 28ல் தற்கொலை செய்து கொண்டார். ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, சேவூர் போலீசார் கைது செய்தனர். மூவரும் ஜா மின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ரிதன்யா தந்தை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள், நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, தினமும் காலை, மாலை சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.