உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்தில் பலியான அதிகாரி குடும்பத்துக்கு ரூ.1.39 கோடி

விபத்தில் பலியான அதிகாரி குடும்பத்துக்கு ரூ.1.39 கோடி

சென்னை:வாகன விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன அதிகாரியின் குடும்பத்திற்கு, 1.39 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, காப்பீட்டு நிறுவனத்துக்கு, சென்னை வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் சைலபதி; 2020 ஜூலையில், திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் வழியாக காரில் சென்றார். காரை டிரைவர் ஓட்டினார். வேகமாக சென்ற கார், டீக்கடையில் மோதி கவிழ்ந்ததில் உள்ளே இருந்த சைலபதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.கணவரின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவரது மனைவி பொன்சித்ரா மற்றும் குடும்பத்தினர், சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். சைலபதி மாதம், 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்ததாகவும், 2.44 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும் மனுவில் கோரியிருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த, முதன்மை நீதிபதி டி.லிங்கேஸ் வரன் பிறப்பித்த உத்தரவு:அஜாக்கிரதையாக டிரைவர் காரை ஓட்டியதில், இந்த விபத்து நடந்துள்ளது. அஜாக்கிரதையாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரம் இருந்த டீக்கடையில் மோதியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர் சாட்சியம் அளித்துள்ளார். கார் உரிமையாளரும், காப்பீட்டு நிறுவனமும் இழப்பீடு வழங்க வேண்டும்.விபத்து நடந்த போது, சைலபதியின் வயது, 31. வருமான வரி பிடித்தத்துக்கு பின், ஆண்டு வருமானமாக, 11.43 லட்சம் ரூபாய்க்கும் மேல் பெற்றுள்ளார். எனவே, இழப்பீடு தொகையாக, 7.5 சதவீத வட்டியுடன், 1.39 கோடி ரூபாய் பெற மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. வட்டியுடன் இழப்பீட்டு தொகையை, 90 நாட்களில், சோழமண்டலம் காப்பீட்டு நிறுவனம், 'டிபாசிட்' செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை