உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு உதவி பெறும் பள்ளி மாணவியருக்கு மாதம் ரூ.1,000: முதல்வர் நாளை துவக்கம்

அரசு உதவி பெறும் பள்ளி மாணவியருக்கு மாதம் ரூ.1,000: முதல்வர் நாளை துவக்கம்

சென்னை:அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நாளை துாத்துக்குடியில் துவக்கி வைக்கிறார். இன்று மாலை, துாத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள 'மினி டைடல் பார்க்' வளாகத்தை திறந்து வைக்கிறார். தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம், 2022 செப்., 5ல் வடசென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லுாரியில் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டம், வறுமை காரணமாக உயர் கல்வியில் சேர இயலாத மகளிருக்கு, உயர் கல்வி வாய்ப்பை தருவதுடன், பெற்றோரின் பொருளாதாரச் சுமையையும் குறைக்கிறது; இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. இத்திட்டத்தால் அதிக மாணவியர் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில், 2022ல் திட்டம் துவங்கியதில் இருந்து இதுவரை, 4.25 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் அரசு பள்ளிகளில் படித்த மாணவியருக்கு மட்டும் அல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவியருக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், நாளை காலை 10:00 மணிக்கு துாத்துக்குடியில் நடக்கும் விழாவில் துவக்கி வைக்கிறார். இதன் வாயிலாக, தமிழகம் முழுதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, உயர் கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவியர் மாதம், 1,000 ரூபாய் பெறுவர். துாத்துக்குடியில் 32.50 கோடி ரூபாய் செலவில், 63,000 சதுர அடியில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பார்க் கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை துவக்கி வைக்கிறார். இதன் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, அரசு தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி