பிரபல லாட்டரி அதிபர்கள், மோசடியாக 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, அபகரித்துக் கொண்டதாக, மளிகை வியாபாரி கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் காந்திரோடை சேர்ந்தவர் அங்குராஜ். இவர், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தை மாரியப்ப நாடார். அவரது சுய சம்பாத்தியத்தில், பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரத்தில், 2.25 ஏக்கர் நிலம் வாங்கினார். கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி, என் தந்தை இறந்து விட்டார். அவர் வாங்கிய நிலத்தை, கோவை லாட்டரி உரிமையாளர்களான பெஞ்சமின், மார்ட்டீன் ஆகியோர் விலைக்குக் கேட்டனர். நிலத்தை விற்க மறுத்து விட்டேன். 'அந்த நிலத்தை எப்படியும் அடைந்தே தீருவோம்' எனக் கூறிவிட்டு இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.
சில நாட்கள் கழித்து, சந்தேகத்தின்பேரில் தாலுகா அலுவலகத்தில் நிலத்திற்கு வில்லங்கச் சான்று பெற்றேன். அதில், எங்கள் நிலம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக இருந்தது. கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி, முத்துபாண்டி என்பவர் அவரது மனைவி சகாயமேரிக்கு, ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கு, எங்கள் நிலத்தை விற்பனை செய்துள்ளார். அதே நாளில் சகாயமேரி, திருமழிசையைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு, அதே நிலத்தை 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அதன் பின், 31ம் தேதி ரஞ்சித்குமார், வேலூர் மாவட்டம் வெட்டுவானம் கிராமத்தைச் சேர்ந்த முகுந்தன் என்பவருக்கு, பொது அதிகாரம் வழங்கி உள்ளார்.
அவர் அந்த நிலத்தை, 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி, 13 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு, கோவை காந்திபுரத்தில் இயங்கி வரும்,'ஹைபிரைட் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் இந்தியா லிமிடெட்' இயக்குனர் பெஞ்சமினுக்கு விற்றுள்ளார். அவர் எங்கள் நிலத்தையும், வேறு சில இடங்களையும் சேர்த்து, அவரது மைத்துனரான மார்ட்டீனிடம், ஒரு கோடியே 85 லட்சத்து 37 ஆயிரத்து 750 ரூபாய்க்கு, அடமானம் வைத்துள்ளார். எங்களுக்கு சொந்தமான நிலத்தை, மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் அங்குராஜ் குறிப்பிட்டுள்ளார்; ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசார் உடந்தை?நில மோசடி வழக்கில் சிக்கியுள்ள லாட்டரி அதிபர்களுக்கு, போலீசார் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரபல லாட்டரி அதிபர்களான பெஞ்சமின், மார்ட்டீன் ஆகியோர் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, மோசடியாக அபகரித்துக் கொண்டதாக, அங்குராஜ் என்பவர் கடந்த 11ம் தேதி, நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், முத்துபாண்டி, அவரது மனைவி சகாயமேரி, ரஞ்சித்குமார், முகுந்தன், பெஞ்சமின், மார்ட்டீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்துக் கொண்டனர். சம்பந்தப்பட்டோரை கைது செய்ய, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ம.அறம்வளர்த்தநாதன்