உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏக்கருக்கு ரூ.8,000 நிவாரணம் அறிவிப்பு; ரூ.20,000 எதிர்பார்க்கும் விவசாயிகள்

ஏக்கருக்கு ரூ.8,000 நிவாரணம் அறிவிப்பு; ரூ.20,000 எதிர்பார்க்கும் விவசாயிகள்

சென்னை: 'மழையில் சேதம்அடைந்துள்ள பயிர்களுக்கு நிவாரணமாக, ஏக்கருக்கு 8,000 ரூபாய் அரசு அறிவித்துள்ள நிலையில், 20,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான, 'டிட்வா' புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. அக்டோபரில் பெய்த மழையிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. அப்பயிர்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, ஹெக்டருக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 'அரசு கூடுதல் நிவாரணம் அறிவிக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு, விதை நெல் 1,200 ரூபாய்; நாற்றங்கால் தயாரிக்க 1,000; டி.ஏ.பி., உரம் வாங்க 1,000; டி ராக்டர் உழவுப் பணிக்கு 3,600; நடவுப் பணிக்கு 5,000 ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், ஹெக்டருக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், ஏக்கருக்கு 8,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, எந்த வகையிலும் உதவாது. குறைந்தபட்சம் ஏக்கருக்கு 20,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ