உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

பெரம்பலுார்: பெரம்பலுார் நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலுார் நகராட்சியில், 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிலுவை தொகை, 55 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும், நகராட்சி ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் துாய்மை பணியாளர்கள் மீது காட்டப்படும் அடக்குமுறையை கைவிட வேண்டும், சட்டமுறைப்படி பதிவு செய்யாத ஒப்பந்த நிறுவனத்தை தடை செய்ய வேண்டும், ஒப்பந்த துாய்மை பணியாளர்களின் ஊதியம், இ.பி.எப்., – இ.எஸ்.ஐ., நிதி விபரங்களை இனி வரும் நாட்களில் நகராட்சி அலுவலக பணியாளர்களை கொண்டு கண்காணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை திறக்க விடாமல் நுழைவாயில் முன் அமர்ந்து, அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பணிக்கு வந்த நகராட்சி ஆணையர் உட்பட நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் வெளியே காத்திருந்தனர். இந்த தர்ணா காத்திருப்பு போராட்டம் காலை, 8:00 மணிக்கு தொடங்கி மதியம், 12:00 மணி வரை நீடித்தது. தகவலறிந்த டி.எஸ்.பி., சுரேஷ் மற்றும் போலீசார் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து, துாய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஆணையர் லீனா சைமன் ஆகியோருடன் பேச்சு நடத்தினர். அப்போது, துாய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் விரைவில் பேச்சு நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, இரண்டு மணி நேரத்திற்கு பின் நகராட்சி அலுவலகத்தை திறக்க துாய்மை பணியாளர்கள் அனுமதித்தனர். இருப்பினும், தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து துாய்மை பணியாளர்கள், நேற்று இரவும் நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை