| ADDED : ஆக 07, 2011 01:50 AM
சுதந்திரமான கல்லூரி பருவத்தை இனிமையாக்குவது எப்படி... வழிகாட்டுகிறார், மதுரை அரசு மருத்துவமனை மனநல டாக்டர் ராமானுஜம். கட்டுப்பாடும், கண்காணிப்பும் இன்றி சுதந்திரமாக சுற்றி திரிவதற்கு கல்லூரி களம் அமைத்து தருகிறது. இதுவும் ஒருவிதத்தில் மாணவர்களுக்கு மனபதட்டத்தை ஏற்படுத்துகிறது. பள்ளியில் பாடம் மட்டும் தான் சுமையாக இருக்கும். கல்லூரியில் அப்படியில்லை, சக மாணவிகளோடு பழகுவது கூட பயத்தை தரும். தோழிகளுடன் பழகும் போது மனம் தடுமாறும். அதுவும் விடுதியாக இருந்தால், முகம் முறிக்காமல் நட்பு பாராட்டுவதும் மிகப் பெரிய பாரமாக இருக்கும். எனவே பெற்றோர்கள் வழிநடத்துவது அவசியம். புத்தக சுமை குறைவதோடு, அவர்களின் மனச் சுமையையும் குறைக்க வேண்டும். பாடங்களை தயாரித்து, படிக்க வைத்து மதிப்பெண்ணை மட்டுமே உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக பள்ளிகள் உள்ளன. இங்கே மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் வடிகால் இல்லை. அதனால் தான் கல்லூரியில் கிடைக்கும் சுதந்திரத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
கல்லூரி ஆசிரியர்களும் பாடத்தை மட்டுமே நடத்தாமல், மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை செய்ய வேண்டும். மாணவர்களை சுற்றியுள்ள தவறான சமூகத்தின் திணிப்புகளை பெற்றோர் புரிந்து வழிநடத்தினால், இளைய சமுதாயம் இனிய சமுதாயமாக இருக்கும்.
நமது சிறப்பு நிருபர்