ஒண்ணுமே இல்லாதவனுக்கு இசட், ஒய் பிரிவு பாதுகாப்பு: விஜயை சீண்டும் சீமான்
சென்னை: ''ஒண்ணுமே இல்லாதவனுக்கெல்லாம் இசட் பிரிவு, ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். சென்னை பம்மலில், காமராஜர் பிறந்த நாள் விழாவில், சீமான் பேசியதாவது: 
காமராஜர், ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கான தலைவர் அல்ல; அனைவருக்குமான தலைவர். நல்லாட்சிக்கான அடையாளமாக இன்றளவும் இருந்து வருகிறார். அரசு பணத்தை வீணடிக்க வேண்டாம் என, போலீஸ் பாதுகாப்பையே ரத்து செய்து, ஒரே ஒரு வாகனத்தில் பயணித்தவர் காமராஜர். அப்படி ஒரு தலைவன் வாழ்ந்தான் என்றால் நம்ப முடிகிறதா? அவரை போன்றே இன்னொரு தலைவன் வாழ்வான்; அவன், காமராஜரின் பேரன் சீமான் தான். ஒண்ணுமே இல்லை; கட்சி ஆரம்பிச்சும் ஒண்ணுமே இல்லை. அவர்களுக்கு எல்லாம் 'இசட்' பிரிவு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப் படுகிறது. சிரிக்காதீர்கள். சத்தியத்தின் மகன் நான். சத்தியம் தான் பேசுவேன். ஒண்ணுமே இல்லாத நபர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு, துப்பாக்கி வழங்குகின்றனர். யார் தந்தது சிறந்த ஆட்சி என்பதில், நான் ஆட்சிக்கு வந்ததும், காமராஜருக்கும், எனக்குமான போட்டியாக இருக்கும். நடுவில் வந்தவர்கள் தறுதலைகள். இப்படியெல்லாம் பேசுவதால், சொந்த ஜாதிக்காரர்கள் கூட ஓட்டுபோட மாட்டார்கள். இந்தியாவிலேயே, சொந்த ஜாதியாலேயே நிராகரிக்கப்பட்டவன் சீமான் தான். என் ஜாதிக்காரன் யாருமே ஓட்டு போடாமல், 36 லட்சம் ஓட்டுகளை பெற்று, மூன்றாவது கட்சியாக வந்து நிற்கிறேன். படித்தவர்கள் எல்லாம் பணம் வாங்கி ஓட்டு போடும் முட்டாளாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.