உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல் செங்கோட்டையன் பகிரங்க புகார்

அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல் செங்கோட்டையன் பகிரங்க புகார்

கோவை: ''தி.மு.க.,வில் மட்டுமல்ல, அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல் உள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்ததால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அ.தி.மு.க.,வில் இருந்து அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி நீக்கினார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், தன்னை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்தும் செங்கோட்டையன் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், கோவையில், நேற்று அவர் அளித்த பேட்டி: என் அரசியல் வாழ்வில் ஒரு நாளும் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொண்டது கிடையாது. தற்போது உள்ள பிரச்னைகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கும்போது, சில விஷயங்கள் தெளிவாக தெரிகிறது. குடும்ப அரசியல் என்பது, தி.மு.க.,வில் மட்டும் இல்லை; அ.தி.மு.க.,விலும் இருக்கிறது. பழனிசாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் அரசியலில் தலையெடுத்து வருகின்றனர். இதை பழனிசாமியும் முழு மனதோடு ஆதரித்து வருகிறார். இது நாடறிந்த உண்மை. அ.தி.மு.க.,வில் அவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதை கட்சியில் இருக்கும் நிறைய பேர் அறிந்துள்ளனர். அவர்களெல்லாம் பழனிசாமி மீதும் குடும்பத்தினர் மீதும் கடுமையான வருதத்தில் உள்ளனர். என் 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பயணத்தை பொறுத்தவரை, பல்வேறு கருத்துக்களைப் பரிமாறினாலும், என்னுடைய பணிகளை சரியாக மேற்கொண்டு வருகிறேன். எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து ஜெயலலிதா காலம் மற்றும் இன்று வரை அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கம் வலுப்பெறவும், வெற்றி பெறவும் தான் தொடர்ந்து முயற்சிக்கிறேன். தன்னால் முடியாத ஒன்றை, முடியும் என வீம்புக்கு சொல்லிவிட்டு, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்றக்கூடாது என்பது தான் என் எண்ணம். இதுவே, பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் அனைவருக்கும் நான் கூறும் ஆலோசனை. இவ்வாறு, அவர் தெரிவித்தார். நீதி கேட்டு சுற்றுப்பயணம் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கியதை எதிர்த்து, 'கட்சியில் தனக்கு இழைக்கப்பட்டது அநீதி' எனச் சொல்லி, நீதி கேட்டு, சுற்றுப்பயணம் செல்ல செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: கடந்த 1980ல், அன்றைய பிரதமர் இந்திரா, அ.தி.மு.க., ஆட்சியை கலைத்தார். உடனே, 'நான் என்ன தவறு செய்தேன்' என, மக்களிடம் நீதி கேட்டு, எம்.ஜி.ஆர்., பயணம் மேற்கொண்டார். எம்.ஜி.ஆர்., பாணியில், 'நான் என்ன தவறு செய்தேன்' என்ற கேள்வியை முன்வைத்து, பழனிசாமிக்கு எதிராக, கட்சிக்குள் தனக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக, கொங்கு மண்டலத்தில் உள்ள, 64 சட்டசபை தொகுதிகளுக்கும் செல்லவதுடன், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வினரை ஒருங்கிணைத்து, வரும் ஜனவரியில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாரிசு அரசியல் இல்லை

அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் இருப்பதாக செங்கோட்டையன் கூறியது சரியல்ல. தி.மு.க.,வைப் போல், குடும்ப ஆதிக்கம் எதுவும் அ.தி.மு.க .,வுக்குள் கிடையாது; அது செங்கோட்டையனின் கற்பனை. தமிழகத்தில் பீஹார் தொழிலாளர்களை, தி.மு.க.,வினர் துன்புறுத்துவதாக பிரதமர் மோடி கூறியதற்கு, தி.மு.க., தான் பதில் கூற வேண்டும். அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை ஜாதி, மதம், இனம் என, எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. வேறுபாடு பார்ப்பது, தி.மு.க.,வுக்கு கைவந்த கலை. - ஜெயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kjpkh
நவ 04, 2025 09:46

நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு அதனால முழிக்குது அம்மா கண்ணு. இதுதான் இன்றைய நிலை.


duruvasar
நவ 04, 2025 09:45

ஆதிமுகாவில் 50 ஆண்டு காலம் பணியாற்றி ஆராச்சி மூலம் கண்டுபிடித்தைதான் இப்போது வெளியிட்டிருக்கிறார்.


VENKATASUBRAMANIAN
நவ 04, 2025 08:02

இவருக்கு பதில் சொல்லாமல் அதிமுகவினர் இருந்தாலே போதும். தானாகவே அடங்கி விடுவார். இல்லையெனில் திமுகவுக்கு கொண்டாட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை