| ADDED : டிச 27, 2025 01:54 PM
காங்கேயம்: வழி தெரியாமல் இருந்த போது, எனக்கு வழிகாட்டியவர் விஜய் என தவெக கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது மேடையிலேயே கண் கலங்கினார்.திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தனியார் மினி மஹாலில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசியதாவது: வழி தெரியாமல் இருந்த போது, எனக்கு வழிகாட்டியவர் விஜய். நான் இன்றைக்கு சொல்கிறேன், என் உடம்பில் ஓடுகிற ஒரு துளி ரத்தமும் விஜய்க்காக தான் என கூறி மேடையில் செங்கோட்டையன் கண் கலங்கினார். அவரை செங்கோட்டையன் வாழ்க என தொண்டர்கள் ஆவேச முழக்கமிட்டு சமாதானம் செய்தனர். தொடர்ந்து செங்கோட்டையன் பேசியதாவது: ஜெயலலிதாவுக்கு பிறகு நான் ஒருவரை அடையாளம் காட்டினேன். அந்த அடையாளம் காட்டியவர் தான் இறுதியில் என்னை அடையாளம் காட்டி விட்டு சென்றார். கவலை பட தேவையில்லை. விஜயுடன் இணைந்த பிறகு கோவை விமான நிலையத்தில் 3:30 மணி நேர கால தாமதம், ஆனால் நீங்கள் என்னை வரவேற்க மட்டும் இல்லாமல் தாங்கி பிடிக்கிறோம் என 5 ஆயிரம் தொண்டர்கள் பசியோடு காத்து இருந்தார்கள். இதே நிலை அன்றைக்கு முதல்வராக இருந்த என்னை தூக்கி எறிந்தவர் இபிஎஸ் வருகிறபோது, அவரை வரவேற்க ஒரு கோடி ரூபாய் செலவு செய்தோம். இன்றைக்கு ஒரு முன்னாள் அமைச்சர் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என சொல்லவில்லை என்கிறார். ஆனால் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சம்பிரதாயத்திற்கு பார்த்தோமே தவிர பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்கின்றனர். ஆனால் அதிமுக இந்த செய்தியை பரப்பி விட்டதே பாஜ தான் என்கிறார்கள், அதிமுக- பாஜ இடையே இரு வேறு கருத்துக்கள். தவளை தண்ணில இழுக்குமாம், ஓநாய் மேட்டுக்கு இழுக்குமாம், அந்த கதையாய் உள்ளது பாஜ, அதிமுக கூட்டணி.தமிழகத்தில் விஜயை முதல்வராக ஏற்று கொண்டு யார் வேணாலும் கூட்டணிக்கு வரலாம், ஆனால் விஜயை தாண்டி யாராலும் முதல்வர் என்ற கனவை கூட காண முடியாது. விஜய் மலேசியா சென்றுள்ளார். கேசட் வெளியிடப்படும், 9 என்றாலே வெற்றியின் சின்னம், அப்போது படம் வெளியாக உள்ளது, அதற்கு பிறகு யாராலும் வாயை திறக்க முடியாது, ஜனநாயகன் படத்தை எதிர்பார்த்துள்ளோம். தளபதி வருவார், தலைமை ஏற்பார், வெற்றியை சூடுவார், மக்களின் கண்ணீரை துடைப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.