ஜாமின் நிபந்தனையில் தளர்வு கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனையை தளர்த்தலாமா என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது, பலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, அமலாக்க துறையும் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, செந்தில் பாலாஜியை கைது செய்தது. ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்தார். தற்போதைய தி.மு.க., அரசில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். பின், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தின் அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜாமின் நிபந்தனையில் தளர்வு வழங்கக்கோரி, செந்தில் பாலாஜி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி இடம் பெற்ற அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், ''இந்த வழக்கில் அமலாக்கத்துறை இணை இயக்குநர் முன், வாரம் இரண்டு முறை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில், கடந்த 12 மாதங்களில், 116 முறை தவறாமல் செந்தில் பாலாஜி ஆஜராகி உள்ளார். ''அதனை கருத்தில் கொண்டு, ஜாமின் நிபந்தனையை தளர்த்த வேண்டும்,'' என்றார். அவரின் வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி மனு தொடர்பாக, அமலாக்கத்துறை ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத் தனர். - டில்லி சிறப்பு நிருபர் -: